செம்மணி புதைகுழி தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் விடுத்துள்ள கோரிக்கை
செம்மணி மனிதப்புதைகுழியையோ அல்லது 2009 இல் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்களையோ மாத்திரம் தமிழர்களுக்கு எதிரான மீறல்களாகக் கூறமுடியாது.
செம்மணி மனிதப்புதைகுழியையோ அல்லது 2009 இல் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்களையோ மாத்திரம் தமிழர்களுக்கு எதிரான மீறல்களாகக் கூறமுடியாது. மாறாக 1948 இல் நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழர்களுக்கு எதிராக மீறல்கள் தொடர்ந்து பதிவாகிவருகின்றன. தற்போது எதிர்பாராதவிதமாகக் கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழியை தமிழர்களுக்கு எதிரான சகலவிதமான மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அடித்தளமாகவே பார்க்கவேண்டும் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டிய அதேவேளை, தமிழர்களுக்கு எதிரான மீறல்கள் பரந்துபட்ட அடிப்படையில் அணுகப்படவேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், 'அண்மையில் அடையாளங்காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியும் அதில் கண்டறியப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்டோரின் எலும்புக்கூடுகள் மற்றும் புத்தகப்பை, காலணி, பொம்மை என்பனவும் தற்போது உலகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கின்றன. செம்மணியில் அடையாளங்காணப்படுபவை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் முக்கிய சாட்சியங்களாகும். இருப்பினும் அதுகுறித்த உண்மைகளை 'கற்பனையில் பேசுகிறார்கள்' என்று கூறி சில அரசியல் தரப்புக்கள் புறந்தள்ள முற்படுகின்றன' எனச் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை செம்மணியைப் போன்று மன்னார், கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வரம் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும், அவை பற்றிய உண்மைகள் மழுங்கடிக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்திய சிறிதரன், 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சுமார் 100,000 க்கும் மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் இருப்பதாக மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோஸப்பினால் வழங்கப்பட்ட சாட்சியங்களுக்கு அமைவாக இவ்விடயம் பரந்துபட்ட அடிபப்டையில் நோக்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அதேபோன்று செம்மணி மனிதப்புதைகுழி விவகாரமானது 1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் மீறல்கள் தொடர்பில் பரந்துபட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன நிலைநாட்டப்படுவதற்கும் அதனூடாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்படுவதற்குமான அடிப்படையாக நோக்கப்படவேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.
'செம்மணி மனிதப்புதைகுழியையோ அல்லது 2009 இல் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்களையோ மாத்திரம் தமிழர்களுக்கு எதிரான மீறல்களாகக் கூறமுடியாது. மாறாக 1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழர்களுக்கு எதிராக மீறல்கள் தொடர்ந்து பதிவாகிவருவதுடன், அதன் விளைவாகவே ஆயுதப்போராட்டம் எழுச்சியடைந்தது. ஆனால் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், இறுதிக்கட்டப்போரின்போது மாத்திரமே மீறல்கள் இடம்பெற்றதைப்போன்று, அதுகுறித்து மட்டுமே பேசப்படுகின்றது.
'யுத்தம் முடிவுக்குகொண்டுவரப்பட்டதன் பின்னர், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சகல மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என நாம் வலியுறுத்தியிருந்தோம். இருப்பினும் அக்காலப்பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தலைமைகள் அதனை வலியுறுத்தாதன் விளைவாகவும், உள்ளக விசாரணையை முன்னிலைப்படுத்தக்கூடிய பொறிமுறைகள் நிறுவப்பட்டதன் காரணமாகவும் பரந்துபட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.
'இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது எதிர்பாராதவிதமாகக் கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழியை தமிழர்களுக்கு எதிரான சகலவிதமான மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அடித்தளமாகவே பார்க்கவேண்டும். அதனூடாக மாத்திரமே தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும், அரசிடமிருந்து தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்கக்கூடியவாறான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்' எனவும் கஜேந்திரகுமார் தெளிவுபடுத்தினார்.





