இலங்கை - இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவனம்
குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கிறது என்பது குறித்து இதன்போது கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.
உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் இலங்கை - இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய பொதுவான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் 02-10-2026 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கரைச் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது, கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற சந்திப்பையும் நினைவுகூர்ந்தவாறு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் நல்ல முறையிலும் பலமாகவும் வளர்ச்சியடைந்து வருவது குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கிறது என்பது குறித்து இதன்போது கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன. அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் பொதுமக்களுடனும் இளைஞர் சமூகத்துடனும் நெருக்கமாகச் செயல்பட்டுத் தொடர்ச்சியான தொடர்பாடலைப் பேணுவதன் அவசியமும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதன் அவசியமும் கருத்துப் பரிமாறப்பட்டது.
இந்த இலக்குகளை அடைவதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலும், இரு நாட்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. முக்கியமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோர் மக்களுடன் நெருக்கமாகச் செயல்படுவதற்காக எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பாகச் செலுத்தும் கவனம் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
மேலும், உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய பொதுவான நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.





