'மித்ர சக்தி 2026' கூட்டுப் பயிற்சிக்காக இந்திய இராணுவத்தினர் வருகை
இதன் ஊடாக இரு நாட்டுப் படையினரும் தமது தந்திரோபாய அறிவையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்வதுடன், கூட்டாகச் செயற்படும் திறன்களையும் மேம்படுத்திக்கொள்ளவுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினருக்கு இடையில் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இருதரப்பு கூட்டுப் போர்ப் பயிற்சித் தொடரின் 12ஆவது கட்டமான 'மித்ர சக்தி– 2026' கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய இராணுவக் குழுவினர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
19 அதிகாரிகள் மற்றும் 150 படையினரை உள்ளடக்கிய இக்குழுவினரை, இக்கூட்டுப் பயிற்சியின் இலங்கைத் தரப்பு பொறுப்பாளரான கேணல் நந்திக அபேசேகர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் உதவிப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மந்தீப் சிங் நேகி ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் நடைபெறவுள்ள இப்பயிற்சியானது, இரு நாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் தொழில்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'மித்ர சக்தி' கூட்டுப் பயிற்சியின் இம்முறை நடவடிக்கைகள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவின் வழிகாட்டுதலின் கீழும், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் திலுப பண்டாரவின் மேற்பார்வையின் கீழும் முன்னெடுக்கப்படுகின்றன.
இம்முறை பயிற்சியின் போது வான்வழி ஆதரவு உள்ளிட்ட அத்தியாவசிய போர் ஆதரவுக் கூறுகளை ஒருங்கிணைத்து, படையணி மட்டத்திலான கிளர்ச்சி தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதன் ஊடாக இரு நாட்டுப் படையினரும் தமது தந்திரோபாய அறிவையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்வதுடன், கூட்டாகச் செயற்படும் திறன்களையும் மேம்படுத்திக்கொள்ளவுள்ளனர்.
இப்பயிற்சியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 17 அதிகாரிகள் மற்றும் 153 படையினர் பங்கேற்கின்றனர். காலாட் படையணி, கவச வாகன படையணி, பீரங்கி படையணி, பொறியியல் படையணி, சமிக்ஞை படையணி, இயந்திரவியல் காலாட் படையணி, மருத்துவப் படையணி, மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி, இராணுவப் பொலிஸ் படையணி மற்றும் மகளிர் படையணி ஆகியவற்றைச் சேர்ந்த படையினருடன் இலங்கை விமானப்படையும் இணைந்துகொள்கிறது.
பயிற்சி கட்டுப்பாட்டுக் குழுக்கள் மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் உள்ளடங்கலாக 650க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளதோடு, போர்ப் பயிற்சிகளுக்கு மேலதிகமாக இரு நாட்டுப் படையினரிடையே சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள், கலாசார நிகழ்வுகள் மற்றும் நிறுவன ரீதியான விஜயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





