பல் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு இலங்கை - துருக்கி உயர்மட்டப் பேச்சு
இருதரப்பு வர்த்தகத்தைப் பன்முகப்படுத்துவது மற்றும் வர்த்தகர்களுக்கு இடையிலான பரிமாற்றங்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும், இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் ஆகியோருக்கு இடையே பல் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
பிரதி அமைச்சரின் அண்மைய துருக்கி விஜயத்தின் ஊடாக ஆறு துறைகளில் உயர்மட்ட அரசியல் ஈடுபாடுகள் மீளப் புதுப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாகவே இச்சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
குறித்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட இரண்டு இருதரப்பு உடன்படிக்கைகளை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், நிலுவையில் உள்ள இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத் துறையைப் பொறுத்தவரை, மாறிவரும் உலகளாவிய சந்தைச் சூழலுக்கு மத்தியில் துருக்கிக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து இரு தரப்பினரும் மீளாய்வு செய்தனர். அத்துடன், இருதரப்பு வர்த்தகத்தைப் பன்முகப்படுத்துவது மற்றும் வர்த்தகர்களுக்கு இடையிலான பரிமாற்றங்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இலங்கையில் உள்நாட்டு விமானச் சேவைகளை அறிமுகப்படுத்துவதில் துருக்கியின் முதலீட்டு சாத்தியக்கூறுகள் உட்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
மேலும், கலாசார சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல் தளங்களைப் பாதுகாத்தல் ஆகிய துறைகளில் மேலதிக ஒத்துழைப்பை வழங்குவதற்கான பாரிய வாய்ப்புகள் உள்ளதையும் இரு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





