செம்மணி புதைகுழி விவகாரம் நல்லாட்சியில் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு மறந்திருந்தது - அமைச்சர் பிமல்
இந்தியா சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டுக்கு வருவதற்கு விரும்புகின்றனர். 6580 குடும்பங்கள் நாடு திரும்பி இங்கு மீள்குடியேறியுள்ளன.
நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்த இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கு மறந்துபோயிருந்த செம்மணி புதைகுழி விவகாரம், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நினைவுக்கு வந்தது ஏனென்று தனக்கு புரியவில்லையென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-03-2026 அன்று மத்திய கிழக்கின் யுத்தத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பி அரசாங்கம் அது தொடர்பான விசாரணைகளை நடத்துவதில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். நாங்கள் குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சியாகும். எவ்வாறாயினும் செய்தவற்றை பாராட்டாவிட்டாலும் செய்ததை தெரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும்.
1999ஆம் ஆண்டில் செம்மணியில் 15 எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் 2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் சுமந்திரன் போன்ற தமிழரசுக் கட்சியினர் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.
இதன்போது இவர்களுக்கு ஏன் அந்த மனித புதைகுழி தொடர்பில் நினைவுக்கு வரவில்லை. 5 வருடங்கள் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்ததுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் ஒருவரும் இருந்தார். ஏன் அப்போது நினைவு வரவில்லை.
எமது அரசாங்கத்தின் 17 மாதங்களில் செம்மணி தொடர்பில் விசாரணைகளை நடத்தி 224 எலும்புகூடுகள் மீட்கப்பட்டுள்ளன. 25 வருடங்களாக 15 எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்து சிறிது காலத்தில் 200க்கும் மேற்பட்ட எலும்புகூடுகளை மீட்டுள்ளோம். 30 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற குற்றமொன்றே. ஆனால் சந்தேகம் ஏற்பட்டது என்பதற்காக எவரையும் கைதுசெய்ய முடியாது. சிறிய தவறு நடந்தாலும் குற்றவாளிகள் தப்பிவிடுவர்கள். எமக்கு இதனை தேடுவதற்கு மக்கள் ஆணை உள்ளது. நீதியை நிலைநாட்டுவது நீதிமன்றத்தின் நடவடிக்கை என்றாலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மீண்டும் அங்கு அகழ்வு பணிகள் நடக்கவுள்ளன.
இதேவேளை இடம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு சென்ற 89ஆயிரம் பேர் வரையிலானோர் இருக்கின்றனர். நான் 2008 காலத்தில் தமிழ்நாட்டு முகாமுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தோம். இப்போது தமிழ்நாட்டு தேர்தல் நெருங்கும் நிலையில் அவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கு தமிழ்நாட்டு முதல்வர் கூறியுள்ளார். அதனை வரவேற்கின்றேன். பலர் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர். நாங்கள் இந்தப் பிரச்சினையில் எங்கே இருக்கின்றோம் என்று பார்க்க வேண்டும்.
இந்தியா சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டுக்கு வருவதற்கு விரும்புகின்றனர். 6580 குடும்பங்கள் நாடு திரும்பி இங்கு மீள்குடியேறியுள்ளன. அவர்களுக்கு தேவையான வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். அங்கிருந்து வருபவர்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
அங்கேயே இருப்பதற்கு விரும்புகின்றவர்கள் இருந்தால் அவர்களுக்கு குடியுரிமையை வழங்குங்கள் என்று கோருகின்றோம். இவர்கள் சட்டவிரோதமாக சென்றிருந்தாலும் நாடு திரும்பும் போது அவர்களை கைது செய்ய வேண்டாம் என்று விமான நிலையத்திற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.





