அரசாங்கம் மாகாணசபைதேர்தலை நடத்துமென எதிர்பார்க்க முடியாது: ராஜித சேனாரத்ன
இவர்கள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவார்கள் என எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டாலும் ஒரு சபையில் கூட அரசாங்கத்தால் வெற்றி பெற முடியாது.
மாகாணசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் தனது ஆட்சி காலத்தில் நடத்துவம் என எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டாலும் ஒரு சபையில் கூட அரசாங்கத்தால் வெற்றி பெற முயடிhது. எந்தவொரு நெருக்கடிகளுக்கும் அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
களுத்துறையில் 27-12-2025 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல்வாதிகளுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன என்பதற்காக ஊடக நிறுவனங்களை தடை செய்வதற்கு எமக்கு எவ்வித உரிமையும் இல்லை. சர்வாதிகார அரசாங்கங்கள் மாத்திரமே ஊடக அடக்குமுறைகளை மேற்கொள்ளும். ஜனநாயக ஆட்சியில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளோ வரையறைகளோ விடுக்கப்படுவதில்லை.
2002ஆம் ஆண்டு திருத்தப்பட்ட குற்றவியல் சட்டத்துக்கமைய ஊடகங்கள் குறிப்பிட்டவொரு நபருக்கு எதிராக அவதூறு பரப்பும் பட்சத்தில் , அந்த ஊடகத்துக்கு எதிராக சிவில் வழக்கு தொடர முடியும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2002இல் குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கி அன்று ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தியதை இன்று நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட ஊடக சுதந்திரத்தை மீளப் பெற முயற்சிப்பது பாரிய தவறாகும். இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்தின் அழிவுக்கு வழி வகுக்குமே தவிர, ஊடகங்களின் அழிவுக்கு அல்ல. பிரதான வைத்தியசாலைகள் பலவற்றிலும் தற்போது அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கு தீர்வு வழங்குவதை விடுத்து அரசாங்கம் ஊடகங்களை முடக்குவதிலேயே தீவிரமாக அவதானம் செலுத்தி வருகிறது.
இந்த அரசாங்கம் ஆட்சியமைத்த போது, எதிர்க்கட்சிகளும் இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். ஆனால் காலம் செல்லும் போது இந்த அரசாங்கத்தால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் ஆட்சியமைத்து ஓராண்டு கடந்துள்ள போதிலும், பிரதேசசபை மட்டத்தில் கூட எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இவர்கள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவார்கள் என எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டாலும் ஒரு சபையில் கூட அரசாங்கத்தால் வெற்றி பெற முடியாது. எந்தவொரு நெருக்கடிகளுக்கும் அரசாங்கத்திடம் தீர்வு இல்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பாராளுமன்றம் வருவார் என சிலரால் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு அவ்வாறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
தான் மீண்டும் பாராளுமன்றம் வருவதாயின் நாட்டுக்கு ஏதேனும் சேiவாயற்ற வேண்டும். ஆனால் இந்த அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறு அதனை செய்ய முடியும் என்று அவர் கேள்வியெழுப்புகின்றார். எவ்வாறிருப்பினும் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயத்தை எதிர்கொண்டால், அவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர் சிறந்தவொரு தீர்மானத்தை எடுப்பார் என்றார்.





