இலங்கையின் வலுவான பங்காளியாக பிரிட்டன் திகழும்: பிரதியமைச்சர் அருண்
நாட்டுக்கு வருகைதந்திருக்கும் பொதுநலவாய பாராளுமன்றக்குழுவின் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.

இலங்கையின் வளர்ச்சிக்கும், உறுதிப்பாட்டுக்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் ஆதரவளிக்கக்கூடிய வலுவான பங்காளியாக பிரிட்டன் திகழும் என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு வருகைதந்திருக்கும் பொதுநலவாய பாராளுமன்றக்குழுவின் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது பூகோள அரசியல், பொருளாதார மீட்சி, வர்த்தகம், முதலீடு, நல்லிணக்கம், மனித உரிமைகள், போரின் பின்னரான முன்னேற்றம், சுற்றுலா மற்றும் டிஜிட்டல் நிலைமாற்றம் என்பன உள்ளடங்கலாக இருதரப்பினரதும் அக்கறைக்குரிய பொதுவான பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்ட மக்களாணை குறித்தும், சகலரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி, ஜனநாயகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்தல் என்பவற்றை முன்னிறுத்தி தம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர பிரிட்டன் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.
அத்தோடு கல்வி, காலநிலைமாற்ற சவலாகளைக் கையாளல், கடன்மறுசீரமைப்பு மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்பு ஆகிய விடயங்களில் பிரிட்டன் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கும் பிரதியமைச்சர் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.