நிலந்த ஜயவர்தன கர்தினால் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நீக்கப்பட்டரா? கம்மன்பில கேள்வி
2013 ஆம் ஆண்டு முதல் சஹ்ரானின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் தேசிய உளவுச்சேவை பொலிஸ் திணைக்களத்துக்கு சுமார் 330 புலனாய்வு தகவல்களை வழங்கியுள்ளது.

நிலந்த ஜயவர்தன ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய சேவையில் இருந்து நீக்கப்பட்டாரா அல்லது கர்தினால் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நீக்கப்பட்டரா என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
சுயாதீனமாக இயங்குவதாகக் கூறப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிலந்த ஜயவர்தனை பதவியில் இருந்து நீக்கியமைக்கு கத்தோலிக்க திருச்சபை ஏன் ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும். அப்படியானால் குறிப்பிட்ட ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தவே நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் 22-07-2025அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு கருத்து தெரிவித்த அவர்
2013 ஆம் ஆண்டு முதல் சஹ்ரானின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் தேசிய உளவுச்சேவை பொலிஸ் திணைக்களத்துக்கு சுமார் 330 புலனாய்வு தகவல்களை வழங்கியுள்ளது.போதுமான அளவு தகவல்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் சி.ஐ.டி உள்ளிட்ட முழு பொலிஸ் திணைக்களத்துக்கு உயிர்த்த ஞாயிறு தினக்குண்டு தாக்குதலை தடுப்பதற்கு முடியாமல் போயுள்ளது.
அன்று பாதுகாப்பு பிரிவு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியப் போக்குடன் செயற்பட்டமையாலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வு தகவலை வழங்கிய தேசிய உளவுச்சேவையின் பிரதானி நிலந்த ஜயவர்தனவை சேவையில் இருந்து நீக்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்தும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத அப்போதைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவி செனவிரத்னவை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
நிலந்த ஜயவர்தன தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்ட குழு முன்வைத்த பரிந்துரைகளின் படி அவர் தனது கடமையை சரிவர செய்துள்ளதாகவும் அவருக்கு தண்டனை வழங்குவதற்கு நியாயமான காரணங்கள் இல்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தது.
தற்போது என்ன நடந்துள்ளது? அந்த ஒழுக்காற்று விசாரணை குழுவின் பரிந்துரைகளை குப்பை தொட்டியில் போட்டு விட்டு ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள புதிய குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது.
வீரச்செயல் ஒன்றை புரிந்த நிலந்த ஜயவர்தன வுக்கு விருது வழங்குவதற்கு பதிலாக அவரை சேவையில் இருந்து நீக்கியமை தொடர்பில் கத்தோலிக்க சபையின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார். சுயாதீனமாக இயங்குவதாகக் கூறப்படும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிலந்த ஜயவர்தனவை பதவியிலிருந்து நீக்கியதாக கருதினாலும் கத்தோலிக்க சபை ஏன் ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும்.
இதன் ஊடாக இரண்டு விடயங்களை எம்மால் ஊகிக்க முடிகிறது. ஒன்று கர்தினாலின் வேண்டுகோளுக்கு அமைய நிலந்த ஜயவர்தன சேவையில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும்? அல்லது ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.