தனிமையாக உணரும் 22 வீத மாணவர்கள்: சுகாதார அமைச்சின் ஆய்வில் கண்டறிவு
கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சுமார் 3500 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
சமூகக் காரணிகள் பலவற்றால் பாடசாலை மாணவர்கள் தற்போது உளவியல் துயரங்களை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உளநல பணியகத்தின் பதில் பணிப்பாளர் வைத்தியர் லக்மினி மகோதரத்தினா தெரிவித்துள்ளார்.
“2024ஆம் ஆண்டில், நாட்டில் பாடசாலை சுகாதார ஆய்வு நடத்தப்பட்டது. பாடசாலை மாணவர்களை ஆய்வுக்குட்படுத்தி அந்த தரவுகளை ஆராய்ந்த போது, 22.4 சதவீதமானவர்கள் தனிமையை உணர்ந்தமையை கண்டறியக் கூடியதாக இருந்தது. 13 – 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 11.9 சதவீதமானோர் துக்கம் காரணமாக தாம் நித்திரை கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர். சுமார் 18மூ பேர் மனச்சோர்வின் அறிகுறிகளைக் காண்பித்தனர் என வைத்தியர் லக்மினி மகோதரத்தினா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சுமார் 7.5 சதவீதமானோருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை. 25 சதவீதமான மாணவர்கள் தங்கள் உள் பிரச்சினைகளைப் பற்றி பேச யாரும் இல்லை என்று குறிப்பிட்டனர். அதாவது 75 சதவீதமான குழந்தைகளுக்கு நெருங்கிய நம்பிக்கைக்குரியோர் எவரும் இல்லை. இது எம்மை யோசிக்க வைக்கிறது. உண்மையில் இவ்வாறானதொரு நிலைமை இலங்கையில் காணப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்த ஆய்வின் அடிப்படையில் எமது நாட்டில் பெருமளவான மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. மாணவர்கள் மாத்திரமின்றி வயதானோரும் கூட இவ்வாறான அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கக் கூடும். பல்வேறு சமூகக் காரணிகள் மற்றும் பதட்டங்கள் இதற்கு பங்களிக்கக்கூடும் என்றும் வைத்தியர் லக்மினி குறிப்பிட்டார். நாட்டில் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 8 தற்கொலைகள் இடம்பெறுகின்றன.
1996 ஆம் ஆண்டில், தற்கொலைகள் இடம்பெறும் வீதத்தில் இலங்கை உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தது. அதாவது ஒரு இலட்சம் பேருக்கு 47 பேர் தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இணைந்து எடுக்கப்பட்ட தீர்மானங்களால் இந்த விகிதம் கணிசமாகக் குறைந்தது. அந்த வகையில் இந்த விகிதம் தற்போது 100 000க்கு 15 என்பவாறு உள்ளது.
கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சுமார் 3500 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படும் சம்பவங்கள் மாத்திரமே ஊடகங்களால் அறிக்கையிடப்படுகின்றன. அவற்றைத் தவிர ஏனையவை அறிக்கையிடப்படுவதில்லை.
ஒட்டுமொத்த தற்கொலை விகிதத்தில் பெருமளவில் மாற்றமில்லை என்றாலும், சமீபத்திய தற்கொலைகள் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகளாகவே இருக்கின்றன. இருப்பினும், ஊடகங்கள் கடந்த காலங்களில் செய்தது போல் இதுபோன்ற சம்பவங்களை தற்போது அடிக்கடி வெளியிடுவதில்லை. அது ஒரு பெரிய முன்னேற்றமாகும் வைத்தியர் லக்மினி மேலும் தெரிவித்துள்ளார்.





