எப்.பி.ஐ வசம் உள்ள 71 பக்க ஆதாரங்களைக் கோரியுள்ளதா அரசாங்கம்? ஐ.தே.க கேள்வி
விசாரணை தொடர்பான ஒட்டுமொத்த ஆவணங்களும் தற்போதும் அமெரிக்க நீதித் திணைக்களத்திடம் பாதுகாப்பாக உள்ளன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தற்போதைய அரசாங்கம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப்பிரிவு (எப்.பி.ஐ) வசம் உள்ள 71 பக்க ஆவணம் உள்ளிட்ட முக்கிய விசாரணை ஆதாரங்களை அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
2019 ஏப்ரல் 21 இல் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கை புலனாய்வு அமைப்புகளுக்குப் போதிய நிபுணத்துவம் இல்லாததால், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமையவே அமெரிக்காவின் எப்.பி.ஐ விசாரணைகளை ஆரம்பித்தது. இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவு, இராணுவப் புலனாய்வு மற்றும் அரச புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து எப்.பி.ஐ இந்த முழுமையான விசாரணையை நடத்தியது.
விசாரணைகளின் முடிவில் எப்.பி.ஐ சமர்ப்பித்த அறிக்கை இலங்கையின் அனைத்து அதிகாரிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2020 நவம்பரில் எப்.பி.ஐ சிறப்பு முகவரினால் அமெரிக்க நீதிமன்றத்தில் 71 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன் , டிசம்பர் மாதத்தில் மொஹமட் நௌபர், மொஹமட் ரிஸ்கான், அஹமட் மில்ஹான் ஆகியோருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கும் பதியப்பட்டது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே இலங்கையில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணை தொடர்பான ஒட்டுமொத்த ஆவணங்களும் தற்போதும் அமெரிக்க நீதித் திணைக்களத்திடம் பாதுகாப்பாக உள்ளன. தற்போதைய அரசாங்கம் இந்த விசாரணைகளை மீண்டும் கையில் எடுத்துள்ளதால், அமெரிக்காவிடமுள்ள இந்த முக்கிய ஆவணங்களைக் கோரி விண்ணப்பித்துள்ளதா?
அவ்வாறு விண்ணப்பிக்கவில்லை எனில் அதற்கான காரணம் என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின், எப்.பி.ஐ வசம் உள்ள இந்த முழுமையான விசாரணை ஆவணங்கள் அனைத்தும் உடனடியாக இலங்கையின் நீதித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கச் செய்யப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.





