‘அல்டோ தர்மே’வின் சகாக்கள் மூவர் கைது
அல்டோ தர்மேவின் நெருங்கிய ஆதரவாளரான துமிந்த என்பவரின் வழிகாட்டலின் கீழேயே இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும், பாரிய போதைப்பொருள் கடத்தல்காரருமான 'அல்டோ தர்மே' எனப்படும் தர்மசிரி லியனகேயின் சகாக்கள் மூவர் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஆயுதக்கும்பலைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, அண்மையில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து 3 கூர்மையான வாள்கள், 15 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதான நபர்கள் கடந்த காலங்களில் மொரட்டுவை, இரத்மலானை மற்றும் கல்கிஸை ஆகிய பகுதிகளில் மற்றொரு குற்ற கும்பலைச் சேர்ந்த தரப்பினர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி, பாரதூரமான காயங்களை ஏற்படுத்திய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான தர்மசிரி லியனகே எனும் அல்டோ தர்மே என்பவரின் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அல்டோ தர்மேவின் நெருங்கிய ஆதரவாளரான துமிந்த என்பவரின் வழிகாட்டலின் கீழேயே இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண் ஒருவரையும் இந்த குழுவினர் தாக்கிப் படுகாயப்படுத்தியுள்ளனர். கைதான சந்தேகநபர்கள் இரத்மலானை மற்றும் அங்குலானை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.





