மத்திய கிழக்கு மோதல்கள் நீடித்தால் உலக பொருளாதார மந்தநிலை பதிவாகும் அபாயம் - சர்வதேச நாணய நிதியம்
இவ்வாண்டு உலக பொருளாதார வளர்ச்சி 2 சதவீதமாக மாத்திரமே இருக்கும் என்றும் நாணய நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மோதல்களை அடுத்து இந்த ஆண்டுக்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்த தமது கணிப்பைக் குறைத்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், ஈரானுடனான போர் நீடித்து எண்ணெய் விலைகள் மேலும் அதிகரித்தால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மிகமோசமானவையாக இருக்கும் என எச்சரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் 15-04-2026 அன்று வெளியிடப்பட்ட 'உலகளாவிய பொருளாதார நிலைவர மதிப்பீடு' அறிக்கையில், 'உலகப்பொருளாதாரம் மீண்டுமொருமுறை அதன் பாதையிலிருந்து திசைமாறும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இம்முறை மத்திய கிழக்கில் வெடித்திருக்கும் போரினால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது' எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை இவ்வாண்டு உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக அமையும் என சர்வதேச நாணய நிதியம் அதன் புதிய அறிக்கையில் எதிர்வுகூறியுள்ள நிலையில், இந்த மதிப்பீடு கடந்த ஜனவரி மாதம் எதிர்வுகூறப்பட்டதை விடவும் 0.2 சதவீதம் குறைவானதாகும். தற்போது மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் மோதல்கள் ஒப்பீட்டளவில் குறுகிய காலமே நீடிக்கும் என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே உலகளாவிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டில் இந்த மிதமான திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று மோதல்கள் தீவிரமடைந்து, கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் 100 - 200 சதவீதம் வரை உயர்வடைந்து, அந்நிலை நீடித்தால், இவ்வாண்டு உலக பொருளாதார வளர்ச்சி 2 சதவீதமாக மாத்திரமே இருக்கும் என்றும் நாணய நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இது 'உலகளாவிய பொருளாதார மந்தநிலையை' (உலக பொருளாதார வளர்ச்சி 2 சதவீதத்துக்கும் குறைவாக அமைவதே மந்தநிலையாகும்) அண்மித்ததாக அமையும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





