பாதுகாப்பு கோரி சீலரத்ன தேரர் அமைச்சுக்கு கடிதம்
அமைச்சின் செயலாளரின் தனிப்பட்ட செயலாளரிடம் இது குறித்த கடிதத்தை இன்று கையளித்துள்ளேன்.
மக்கள் சார்பாக குரல் கொடுக்கும் ஜனசெத பெரமுன கட்சிக்கும் எனக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என பத்தரமுல்லை சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்; உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் உடனடியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரி நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை நேரில் சந்தித்து கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்து தனது கோரிக்கையை முன்வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜனசெத பெரமுன கட்சியின் தலைவராக நான் கடந்த 2010 முதல் 2024 வரையான ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். ஆனால் இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைச் சந்தித்து எனக்கு பொலிஸ் பாதுகாப்பு கோரி கடிதம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று கட்சிப் பணிகளுக்காகக் அர்ப்பணிப்புடன் செயற்படும் போது எனக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்து மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் கட்சித் தலைவரிடமிருந்து எனக்கு எவ்வித பாதுகாப்பும் கிடைக்கவில்லை.
அமைச்சின் செயலாளரின் தனிப்பட்ட செயலாளரிடம் இது குறித்த கடிதத்தை இன்று கையளித்துள்ளேன். அவர்கள் இதனைச் சாத்தியமான மட்டத்தில் குழுக்கள் அமைத்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர். எனது பாதுகாப்பு மட்டுமன்றி ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பொறுப்பாகும். எங்கு சென்றாலும் சில நபர்கள் எம்மை அச்சுறுத்தும் வகையில் கருத்துகளை முன்வைக்கின்றனர். நாம் முன்னதாகவே முறைப்பாடுகளை வழங்கிய போதும் பொலிஸார் அவர்களைக் கைது செய்தாலும் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.
மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியாத அரசாங்கம் அவர்கள் மீது மென்மேலும் வரிச் சுமைகளைச் சுமத்தக் கூடாது. குறிப்பாக மாதுகம போன்ற பகுதிகளில் இன்றும் மக்கள் குடிநீரின்றித் தவிக்கின்றனர். எதிர்க்கட்சியினரும் தமது கடமைகளைச் சரியாகச் செய்யவில்லை. மக்கள் சார்பாகக் குரல் கொடுக்கும் எமது கட்சிக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.





