அமைச்சரவை மறுசீரமைப்பால் குறைநிரப்பு பிரேரணையில் சட்ட சிக்கல்: கயந்த கருணாதிலக
இந்த விடயம் குறித்து முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்க மற்றும் அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தமது நிலைப்பாட்டை குறிப்பிட்டார்கள்.
 
        
அமைச்சரவை மறுசீரமைப்பை தொடர்ந்து குறைநிரப்பு பிரேரணையை முன்வைக்கும் போது ஏற்படும் சட்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களை அரசாங்கத்துக்கு எடுத்துரைத்தோம். தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களுக்கு தீர்வு காண ஒருசில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. சட்ட ரீதியிலான சிக்கல்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 24-10-2025அன்று நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது 2 அமைச்சுக்களுக்குரிய விடயதானங்கள் மாற்றியமைக்கப்பட்டு, அவை மூன்று அமைச்சுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் போது 24 அமைச்சுக்கள் காணப்பட்டன. ஆனால் தற்போது 25 அமைச்சுக்கள் உள்ளன.
இவ்வாறான நிலையில் குறைநிரப்பு தொடர்பில் எழும் சிக்கலுக்கு பொருத்தமான அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது உகந்ததாக அமையும் என்பதை சபை முதல்வருக்கு அறிவுறுத்தினேன். இந்த விடயம் குறித்து முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்க மற்றும் அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தமது நிலைப்பாட்டை குறிப்பிட்டார்கள்.
 
ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவின் தலைமையில் நேற்று  (நேற்று முன்தினம்)இடம்பெற்ற கூட்டத்தில் நாங்கள் கலந்துக்கொண்டோம்.அமைச்சரவை மறுசீரமைப்பை தொடர்ந்து குறைநிரப்பு பிரேரணையை முன்வைக்கும் போது ஏற்படும் சட்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான  சிக்கல்களை எடுத்துரைத்தோம். தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களுக்கு தீர்வு காண ஒருசில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. சட்ட ரீதியிலான சிக்கல்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.





 
  
