மாகாண தேர்தல் முறைமை தொடர்பில் விசேட தெரிவுக்குழு: அமைச்சர் பிமல் தெரிவிப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தமிழ் மக்கள் அரசாங்கங்கள் மீது நம்பிக்கை இழந்தார்கள்.
மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான விசேட தெரிவுக்குழு மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் விசேட பிரேரணையை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போது விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் முன்வைக்கவுள்ளார். மாகாண சபைத் தேர்தல் குறித்து விசேட தெரிவுக்குழுவை அமைத்து தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 15-11-2025அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், உயர்நீதிமன்றம், அரச அலுவலகங்கள், பாராளுமன்றம், மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மாகாண சபைத் தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி விலகியிருந்தது. ஒருசிலர் மஞ்சள் குருவிகளாகினார்கள். இதற்கான காரணத்தை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெளிவாக குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் தீர்வு காண பெற்றுக்கொடுக்கவில்லை. தங்கள் அரசியல் இருப்புக்காகவே தமிழ் மக்களின் வாக்குகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு அரசாங்கம் வீழும் போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவார்கள்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தமிழ் மக்கள் அரசாங்கங்கள் மீது நம்பிக்கை இழந்தார்கள். இந்த அரசாங்கம் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் .இன்றளவில் அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். மாகாண சபைத் தேர்லை நடத்தும் சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிடுகிறார். ஜனாதிபதி நினைத்தால் இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணலாம்.
மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் 2025.05 மாதமளவில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.இந்த திருத்தத்துக்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். பிரதமர் தலைமையில் ஒரு குழுவை நியமித்து, உரிய நடவடிக்கைகளை எடுங்கள். நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்றார்.
இதன்போது உரையாற்றிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க ' பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போது விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான விசேட தெரிவுக்குழு மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் விசேட பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளார். மாகாண சபைத் தேர்தல் குறித்து விசேட தெரிவுக்குழுவை அமைத்து தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மிக்க நன்றி மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டால் இலகுவாக நடவடிக்கை எடுக்கலாம். இந்த தீர்மானத்துக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.





