118 மேலதிக வாக்குகளினால் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான கயந்த கருணாதிலக்க வாக்கெடுப்பைகோரியதையடுத்து சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்த கோரம் மணியை ஒலிக்க உத்தரவிட்டார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 118 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்து 4 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் உரை நிகழ்த்தினார்.
இந்நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று வெள்ளிக்கிழமை வரையான 6 நாட்கள் தொடர்ந்து இடம்பெற்ற நிலையில், 14-11-2025 மாலை 6,15மணியளவில் விவாதம் முடிவுக்கு வந்தபோது, சபைக்கு தலைமைதாங்கிய சபாநாயகர் வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை சபை அனுமதிக்கிறதா என கேட்டபோது, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான கயந்த கருணாதிலக்க வாக்கெடுப்பைகோரியதையடுத்து சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்த கோரம் மணியை ஒலிக்க உத்தரவிட்டார்.
இலத்திரனியல் முறையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக அரசுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,தமிழ் முற்போக்கு கூட்டணி, தொழிலாளர் தேசிய சங்கம் ,மலையக மக்கள் முன்னணி வாக்களித்த அதேவேளை எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ,செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.யின் ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் அர்ச்சுனா எம்.பி ஆகியோர் வாக்களித்தனர் .
இதேவேளை இந்த வாக்களிப்பில் இலங்கைத்தமிழரசுக்கட்சி சபையில் இருந்த நிலையில் ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்காது நடு நிலை வகித்தனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் , கபீர் ஹாசிம் . தொழிலாளர்கட்சியின் தலைவர் காதர் மஸ்தான் எம்.பி ஆகியோர் உட்பட 12 எம்.பி.க்கள் சபைக்கு வருகை தரவில்லை.
இதேவேளை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெற்று அன்றையதினம் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.





