கண் வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டபூர்வமானவை: தேசிய கண் வைத்தியசாலை பணிப்பாளர்
மேலதிகமாக உள்ள வைத்தியர்களை இடமாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வைத்தியர் இடமாற்றங்கள் தன்னிச்சையானவை அல்ல என்றும், அவை அமைச்சின் முறையான சுற்றறிக்கைகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 30-01-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என வைத்தியர் சுட்டிக்காட்டியிருந்தார்.
பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை 121 ஆக உள்ள போதிலும், தற்போது 125 பேர் பணியாற்றி வருகின்றனர். அந்தவகையில் மேலதிகமாக உள்ளவர்களுக்குச் சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவதில் பாரிய நிதி மற்றும் கணக்காய்வுச் சிக்கல்கள் எழுந்துள்ளன.
ஆகையால் மேலதிகமாக உள்ள வைத்தியர்களை இடமாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தொழிற்சங்கப் பிரதிநிதிகளை இடமாற்றம் செய்ய முடியாது என்று எந்தவொரு சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை.
வைத்தியர்களின் இடமாற்றம் என்பது தன்னிச்சையான முடிவோ அல்லது பழிவாங்கும் செயலோ அல்ல. இது சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஒரு வைத்தியர் (வைத்தியர் பிரசாத் கொலம்பகே) கடந்த 13 ஆண்டுகளாக ஒரே வைத்தியசாலையில் பணியாற்றுவது குறித்து கணக்காய்வு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 2013 முதல் 2017 வரை கண் வைத்தியசாலையிலும், பின்னர் சுகாதார அமைச்சிற்கு அனுகுயுத்தம் செய்யப்பட்ட பின்னரும் இங்கேயே தங்கியிருந்து சம்பளம் பெற்றமை குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன.
இரு வைத்தியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பினும் வைத்தியசாலையின் சேவைகள் பாதிக்கப்படாது. விசேட வைத்திய நிபுணர்களுடன் ஆலோசித்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் குறைபாடுகள் காரணமாகவே இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தான் ஒருபோதும் சட்டதிட்டங்களை மீறிச் செயற்படவில்லை, அமைச்சின் தீர்மானங்களைச் நடைமுறைப்படுத்துவது அவசியம். தற்போது இந்த இடமாற்றங்கள் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமைச்சின் அடுத்தகட்ட அறிவுறுத்தல்களுக்கமைய இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.





