அட்டமஸ்தானாதிபதி விவகாரமும் பௌத்த பீடங்களின் கடமையும்
அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான நீதிமன்ற விசாரணைகள் நியாயமான முறையில், எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உள்ளது.
இலங்கையின் ஆன்மீக மற்றும் கலாசார வரலாற்றில் பௌத்த சாசனமும் அதன் விழுமியங்களும் மிக உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளன. சமூகத்தின் ஒழுக்க நெறியையும் ஆன்மீக வழிகாட்டுதலையும் நிலை நிறுத்தும் பொறுப்பு பௌத்த பிக்குகளுக்கே காலம் காலமாக வழங்கப்பட்டு வந்துள்ளது.
இத்தகையதொரு பின்னணியில், அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் மீது முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து மல்வத்து பீடத்தின் சங்க சபை எடுத்துள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பன பௌத்த வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகவும், அதேவேளை பௌத்த சாசனத்தின் தூய்மை குறித்த பாரிய விவாதங்களை எழுப்பும் காரணியாகவும் உருவெடுத்துள்ளன.
அட்டமஸ்தானாதிபதி பதவியின் கடமைகளை தற்காலிகமாக நிறைவேற்றுவதற்காக, ருவன்வெலி மகாசாயாவின் விகாராதிபதியான ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக நாயக்க தேரரை நியமிக்க அட்டமஸ்தான குழு தீர்மானித்துள்ளதாக மல்வத்து பீடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த மே 30ஆம் திகதி கூடிய சங்க சபை, பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து இறுதித் தீர்ப்பு வரும் வரை, அவரது 'நுவரகலாவிய பிரதான சங்கநாயக்க' பதவியை இடைநிறுத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானமானது மல்வத்து பீடத்தின் செயலாளர் நாயக்க தேரர் கலாநிதி பாமுணே சுமங்கல தேரரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பௌத்த பீடத்தின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான அட்டமஸ்தானாதிபதி பதவிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை, பௌத்த சாசனத்திற்குள் புரையோடிப்போயுள்ள ஒழுக்கக் கேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் அவசியத்தை பகிரங்கப்படுத்தியுள்ளது.
இலங்கையில் பௌத்த தேரர்களால் அண்மைக்காலமாக நடாத்தப்பட்டு வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் நிதி மோசடிகள் போன்ற குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதை பல்வேறு சுயாதீன ஊடக அறிக்கைகளும் சிவில் சமூக அமைப்புகளின் தரவுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
கிராமப்புற விகாரைகள் முதல் பிரதான பௌத்த வழிபாட்டுத் தலங்கள் வரை, பௌத்த பிக்குகள் சம்பந்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவாகி வருகின்றன.
துறவற வாழ்க்கைக்குரிய ஒழுக்க விதிகளை முற்றிலும் மீறி, காவி உடைக்கு பின்னால் மறைந்துகொண்டு இழைக்கப்படும் இத்தகைய கொடூரமான குற்றங்கள் பௌத்த சாசனத்தின் மீதும், பிக்குகள் மீதும் மக்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கையை சிதைப்பதாக அமைந்துள்ளன.
ஆன்மீக புகலிடம் தேடி வரும் சிறுவர்களும் பெண்களும் இத்தகைய தேரர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள், பௌத்த விழுமியங்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரும் துரோகமாகும்.
பௌத்த தர்மத்தின் அடிப்படைத் தூண்களாக விளங்குபவை கருணை, ஒழுக்கம் மற்றும் அகிம்சை ஆகும். புத்த பெருமான் பிக்குகளுக்காக வகுத்தளித்த 'வினயப் பிடகம்' என்ற ஒழுக்கக் கோவை, பிக்குகள் எவ்வாறு வாழ வேண்டும், அவர்களின் நடத்தை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மிகக் கடுமையான விதிகளின் மூலம் வரையறுத்துள்ளது.
ஒரு பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பாரதூரமான குற்றச்செயலில் ஈடுபடும்போது, அவர் பௌத்த தர்மத்தின்படி துறவற நிலையை இழக்கிறார். எனவே, இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் தேரர்கள் மீது பௌத்த சாசன விழுமியங்களுக்கு அமைவாக எவ்வித பாரபட்சமும் இன்றி மிகக் கடுமையான முறையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தர்மத்தின் பெயரால் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதை பௌத்த கோட்பாடுகள் எக்காலத்திலும் அனுமதிப்பதில்லை.
இந்த விவகாரத்தில் மிக முக்கியமான சவால் என்னவென்றால், பௌத்த பிக்குகள் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் போது ஏற்படும் புற அழுத்தங்கள் மற்றும் அரசியல் தலையீடுகளாகும்.
இலங்கையின் அரசியல் சூழலில் பௌத்த பிக்குகள் பாரிய செல்வாக்கு செலுத்துபவர்களாக விளங்குவதால், அவர்கள் குற்றங்களில் ஈடுபடும்போது சட்ட அமுலாக்க முகவர் அமைப்புகளும், நீதித்துறையும் அரசியல் ரீதியான அழுத்தங்களை விரும்பியோ விரும்பாமலோ செய்ய நேரிடுகிறது.
காவி உடை அணிந்துள்ள ஒரே காரணத்திற்காக குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கோ அல்லது தண்டனைகள் தளர்த்தப்படுவதற்கோ அனுமதிக்கக் கூடாது. பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது என்பது குற்றவாளிகளான பிக்குகளைப் பாதுகாப்பது அல்ல, மாறாக சாசனத்திற்குள் ஊடுருவியுள்ள கறுப்பு ஆடுகளை இனங்கண்டு அவர்களைப் புறந்தள்ளுவதே ஆகும் என்பதை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்குதான் மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய பிரதான பௌத்த பீடங்களின் வரலாற்று ரீதியான கடமையும் தார்மீகப் பொறுப்பும் முக்கியமானதாகின்றது.
பௌத்த பீடங்கள் எவ்விதமான புற அழுத்தங்களுக்கும், அரசியல் செல்வாக்குகளுக்கும் அடிபணியாது, தங்களின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
அட்டமஸ்தானாதிபதி விவகாரத்தில் மல்வத்து பீடம் எடுத்துள்ள தற்காலிகப் பதவி நீக்க நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், இது போன்ற உன்னத நகர்வுகள் அனைத்து பிக்குகள் மீதான விசாரணைகளிலும் தொடர வேண்டும்.
குற்றச்சாட்டுகள் எழும் போது, அதனை மூடிமறைக்க முயலாது, சட்டபூர்வமான விசாரணைகளுக்கு பௌத்த பீடங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
தவறிழைக்கும் பிக்குகளுக்கு எதிராக பௌத்த பீடங்கள் தங்களின் உள்நாட்டு ஒழுக்காற்று விதிகளின் கீழ் கடுமையான தண்டனைகளை வழங்குவதோடு, அவர்களை சாசனத்திலிருந்து நீக்குவதற்கும் தயங்கக்கூடாது.
மகா சங்க சபையின் இத்தகைய வெளிப்படையான, நீதியான அணுகுமுறைகள் மட்டுமே பௌத்த தர்மத்தின் உன்னதத்தை சமூகத்தில் தொடர்ந்து தக்கவைக்கும்.
ஆன்மீகத் தலைவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்ற செய்தி, சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும். காவி உடை என்பது அதிகாரப் பாதுகாப்புப் கேடயம் அல்ல, அது தார்மீகப் பொறுப்பு என்பதை உணர்த்துவது காலத்தின் கட்டாயமாகும்.
அதுநேரம், அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான நீதிமன்ற விசாரணைகள் நியாயமான முறையில், எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உள்ளது.
பௌத்த சாசனத்தின் தூய்மையையும் பௌத்த விழுமியங்களையும் பாதுகாப்பது என்பது இலங்கையின் ஆன்மீக எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணியாகும். பௌத்த பீடங்கள் அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு, நீதியின் பக்கமும் தர்மத்தின் பக்கமும் நின்று செயலாற்ற வேண்டும்.
காவி உடையின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் நபர்களுக்கு எதிராகச் சட்டமும் பௌத்த விதிகளும் கைகோர்த்து தண்டிக்கும் போதே, பௌத்த சாசனத்தின் மீதான உண்மையான தார்மீக மதிப்பும், மக்கள் கொண்டுள்ள பக்தி பூர்வமான நம்பிக்கையும் எதிர்கால சந்ததியினரிடமும் நிலைத்து நிற்கும்.
இந்த புரிதலின்றி, அரசியலமைப்பு பௌத்தத்துக்கு வழங்கியுள்ள முதன்மை நிலையை பயன்படுத்தி அனைத்தையும் மூடிமறைப்பதற்கு முனைந்தால் அது பௌத்தத்தின் சிதைவுக்கே வழிகோலும் என்பது வரலாறாகும்.





