பேருந்து நிலையங்களுக்கு வண்ணம் பூசுவதே அரசாங்கத்தின் சாதனை - பலங்கொடை கஸ்ஸப தேரர்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 100 முதல் 300 ரூபா வரை அதிகரித்துள்ளதால் சாதாரண மக்களின் வாழ்க்கை பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளது.
கடந்த எழுபது வருட கால அரசியல் வரலாற்றில் ஆட்சியைக் கைப்பற்றி ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், பேருந்து நிலையங்களின் பெயர்ப்பலகைகளுக்கு வண்ணம் பூசுவதையே மிகப்பெரிய சாதனையாகக் கருதி விளம்பரப்படுத்துவது வேடிக்கையான தென பலங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 09-04-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போதைய எதிர்க்கட்சியானது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை விடுத்து, தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் குறித்தே அதிக அக்கறை காட்டி வருகின்றது. இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஏழு உடன்படிக்கைகள் மற்றும் அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பவோ அல்லது அவற்றை பகிரங்கப்படுத்துமாறு கோரி மக்கள் சார்பாக வீதியில் இறங்கிப் போராடவோ இந்த எதிர்க்கட்சிக்குத் துணிவில்லை.
முதுகெலும்பற்ற மற்றும் முறையான திட்டங்கள் இல்லாத ஒரு பலவீனமான தரப்பாகவே எதிர்க்கட்சி செயற்படுகின்றது. ஒரு அரசாங்கம் தோல்வியடையும் போது அந்த அதிகாரத்தைச் சரியான முறையில் கையாண்டு நாட்டுக்கும் இனத்துக்கும் மதத்துக்கும் நன்மை பயக்கும் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கும் ஞானம் இவர்களிடம் கிடையாது.
அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் மீது பாரிய வரிச் சுமைகளை ஏற்றி வருவதை எம்மால் இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறான வரி விதிப்புகளுக்கு மத்தியில் மக்கள் எவ்வாறு வாழ்க்கையை முன்னெடுப்பார்கள் என அரசாங்கம் சிந்திக்க வேண்டும். ஒரு கிலோ அரிசி வாங்கிய மக்கள் இன்று 500 கிராம் அரிசியையே கொள்வனவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 100 முதல் 300 ரூபா வரை அதிகரித்துள்ளதால் சாதாரண மக்களின் வாழ்க்கை பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் பெறும் வருமானத்தைப் போலவே இலங்கை மக்களும் வருமானம் ஈட்டுவதாக ஆட்சியாளர்கள் கருதுகின்றனரோ தெரியவில்லை. எமது நாட்டுப் பெற்றோர்கள் தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் கூலித் தொழில் செய்தும் வியர்வை சிந்தியும் ஈட்டும் சொற்ப வருமானமானது அன்றாட உணவிற்கே போதுமானதாக இல்லை. மக்கள் ஒருவேளை உணவைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு அவல நிலையே இன்று நாட்டில் நிலவுகிறது என்றார்.





