கோட்டாபயவின் இறுதிக்கால ஆட்சியைப் போன்றே தற்போதைய ஆட்சியும் பயணிக்கிறது - எஸ்.எம்.மரிக்கார்
நாம் எமது கொள்கைகளைக் காட்டிக் கொடுக்க மாட்டோம். நாம் இரு தேர்தல்களில் தோற்றது உண்மை.
ராஜபக்ஷ முகாம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிய தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி, கோட்டாபய ராஜபக்ஷவின் இறுதிக்கால ஆட்சியைப் போன்றே பயணிக்கிறது. தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளுடனான தொடர்புகளைத் துண்டித்து, மூடிய பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுவதால் நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ராஜபக்ச முகாம் மீது நாம் இதற்கு முன் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் இன்றும் செல்லுபடியாகும். ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், தற்போதைய அரசாங்கத்தால் அதில் ஒன்றைக்கூட நிரூபிக்க முடியாமலுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை. அவ்வாறு தேசிய மக்கள் சக்தியினர் கூறுவது முற்றிலும் பொய்யானதாகும்.
ஹர்ஷ டி சில்வா என்பவர் மத்திய வலதுசாரி பொருளாதார முகாமினைக் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபராவார். இந்த அரசாங்கம் திறந்த பொருளாதாரத்திற்குப் பதிலாக ஒரு மூடிய பொருளாதார முறைமையைக் கொண்டு வந்து, வெளிநாடுகளுடன் இருக்கும் தொடர்புகளைத் துண்டித்து, ஒரு தீவு மனப்பான்மையுடன் செயல்படுவதால் தான் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதனால்தான் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் வருவதில்லை.
வெளிநாட்டு முதலீடுகள் வராததால் தான் டொலர் இருப்பு குறைந்து, டொலரின் பெருமதி 325 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது. அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. எனவே, எங்களுடைய கட்சியின் பொருளாதாரக் குழுவிற்குத் தலைமை தாங்கி, ஒரு வலதுசாரி பொருளாதாரத்தை உருவாக்க ஹர்ஷ டி சில்வா தயாராக இருக்கிறார். அதை அவர் தெளிவாகக் கூறியிருக்கிறார், அவர் அரசாங்கத்திற்குப் போகப் போவதில்லை.
கடந்த வாரம் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பின் பேரில் நாம் அங்கு சில துறைகளை அவதானிக்கச் சென்றிருந்தோம். ஆளும் மற்றும் எதிர் தரப்பு எம்.பி.க்கள் பலரும் அதில் பங்கேற்றிருந்தனர். இதன் போது இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி நிறுவனங்கள், நெடுஞ்சாலைகள் போன்றவற்றை பார்வையிட்டிருந்தோம். அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள், நடைமுறையில் செய்யக்கூடியவை மற்றும் உடனடியாக வருமானத்தை பெறக் கூடிய வழிகள் பற்றி எமக்கு ஒரு தெளிவு கிடைத்தது.
சஜித் பிரேமதாச ஏற்கனவே நாட்டின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவராகவுள்ளார். பொது எதிர்க்கட்சி என்று பதிவு செய்யப்பட்ட ஒன்று நாட்டில் இல்லை. ராஜபக்ச முகாமிற்குள் எம்மை தள்ளி எமக்குள் பிளவுகளை ஏற்படுத்த முடியாது. நாம் எமது அரசியலை எமது வழியிலேயே முன்னெடுப்போம். நாம் திறந்த சந்தைப் பொருளாதாரத்தையே ஆதரிக்கின்றோம். போட்டித் தன்மையுள்ள சந்தை நிலவ வேண்டும்.
அதன் பலன்கள் கீழ் மட்ட மக்களையும் போய்ச் சேர வேண்டுமே தவிர, சில மோசடி வியாபாரிகளுக்குப் போய்ச் சேரக் கூடாது. மோசடி வியாபாரிகளின் கைகளில் அரசாங்கமும் ஜனாதிபதியும் வளையக் கூடாது. பதவி, அதிகாரம் எமக்கு முக்கியத்துவமுடையவையல்ல. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது அவர் தனிப்பட்ட ரீதியில் எனக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளை வழங்க அழைத்தார். ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
நாம் எமது கொள்கைகளைக் காட்டிக் கொடுக்க மாட்டோம். நாம் இரு தேர்தல்களில் தோற்றது உண்மை. ஆனால் மக்கள் எங்களை திருடர்கள் என்றோ, கொலையாளிகள் என்றோ சொல்வதில்லை. மற்ற இரு அரசியல் முகாம்களில் இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்தன. எங்களுடைய கட்சி ஜனநாயகத்தை நம்பும், உலகத்துடன் கொடுக்கல் வாங்கல் மூலம் பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என்று நம்பும் ஒரு கட்சியாகும்.
கோட்டாபயவின் இறுதிக்காலம் போலத்தான் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியும் போய்க் கொண்டிருக்கிறது. கோட்டாபயவும் பிரச்சனைகள் வரும்போது தற்காலிகத் தீர்வுகளைத்தான் தந்தார், அமைச்சர்களை மாற்றினார். ஆனால் இறுதி முடிவை மக்கள் அவருக்கு வழங்கினர். அதே நிலைமை இந்த அரசாங்கத்துக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.





