சிங்கப்பூர் நிபுணர்களால் சுகாதார ஊழியர்களுக்கு விசேட பயிற்சி
தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் கடமையாற்றும் முன்னணி நிபுணர்களை வலுப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு, கடுமையான சிறுநீரக பாதிப்புக்குள்ளான நோயாளர்களுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான சிறுநீரக மாற்றுச் சிகிச்சை தொடர்பான விசேட பயிற்சிப் பட்டறை அண்மையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது சுகாதாரத்துறையில் உள்ள தீவிர சிகிச்சைப்பிரிவு சேவைகளை வழங்கும் குழுக்களின் திறன் மற்றும் அறிவை மேம்படுத்துவது தேசிய முன்னுரிமையாகும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, இலங்கை மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து சிங்கப்பூரின் சிங்ஹெல்த் மற்றும் சிங்கப்பூர் பொது வைத்தியசாலை ஆகியன இந்த நீண்டகால ஒத்துழைப்புத் திட்டத்துக்கமைய, தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கபடும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான சிறுநீரக மாற்றுச் சிகிச்சை தொடர்பான விசேட பயிற்சிப் பட்டறை முன்னெடுத்துள்ளன.
தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் கடமையாற்றும் முன்னணி நிபுணர்களை வலுப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதன்போது வைத்தியர்கள், சிறுநீரக நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவினருக்கு விசேட விரிவுரைகள் மற்றும் செயன்முறைப் பயிற்சிகள் என்பனவும் நடத்தப்பட்டன.
இது குறித்து கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, உலகளவில் தீவிர சிகிச்சைப்பிரிவு பராமரிப்பில் சவால்கள் நிலவுகின்றன. இலங்கையிலும் இவ்வாறான சிக்கலான நோயாளர்களுக்கு நவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் விசேட அறிவுடன் கூடிய சிகிச்சைகளை வழங்க அமைச்சின் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.
இதேவேளை, சிங்கப்பூர் மருத்துவக் குழுவின் சார்பில் உரையாற்றிய வைத்தியர் ஹோ வுய் கியான் , சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் சிகிச்சைத் தரத்தை உயர்த்தி நோயாளர்களின் உயிரைக் காப்பதே தமது நோக்கம் எனத் தெரிவித்தார்.





