செப்டெம்பர் மாதம் வரை மின்கட்டணம் திருத்தம் செய்யப்படாது - வலுசக்தி அமைச்சர்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படாது.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால் மின்கட்டணம் மற்றும் எரிபொருள் விலையை நிச்சயம் குறைப்போம். சேவைத்துறையை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை மின்கட்டணம் திருத்தம் செய்யப்படாது என துறைமுகம்,சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 11-05-2026அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: - 2026 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்கான 18 சதவீத மின்கட்டண அதிகரிப்பு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 180 இற்கும் அதிகமான மின்னலகுகளை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து இரண்டாம் காலாண்டுக்கான மின்னுற்பத்தியின் போது 27.17 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதற்கமைவாகவே 18 சதவீததத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மொத்த மின்பாவனையாளர்களின் எண்ணிக்கை 79 இலட்சத்து 13 ஆயிரத்து 820 ஆக காணப்படுகின்ற நிலையில் 18 சதவீத மின்கட்டண அதிகரிப்பு 64 இலட்சம் பாவனையாளர்களுக்கு மாத்திரமே அமல்படுத்தப்படும். இவர்கள் 180 அலகுகளை பயன்படுத்தும் மின்பாவனையாளர்களாவர்.
மத்திய கிழக்கில் மோதல் நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில் எரிபொருள் விநியோகத்தை பாதுகாக்கும் பொருட்டு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படாது.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால் மின்கட்டணம் மற்றும் எரிபொருள் விலையை நிச்சயம் குறைப்போம். சேவைத்துறையை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற நிலக்கரி கொள்வனவால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்வதற்காகவே மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான பரிசீலனையின் போது நிலக்கரி விவகாரம் கவனத்திற் கொள்ளப்படவில்லை என்றார்.





