இலங்கை - ஐரோப்பிய ஒன்றியம் மேம்பட்ட பல்லுயிர் பெருக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தம் கைச்சாத்து
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமநிலையான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் இலக்கு முடிவுகளை அடையவில்லை,ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த கூட்டாண்மை அந்த பயணத்தை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

மேம்பட்ட பல்லுயிர் பெருக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை மூலம் நிலையான பொருளாதார மீட்சியை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குவதற்காக, இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்துப்பட்டது.
இந்த மானிய ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் கார்மென் மொரேனோ ஆகியோர் அதிகாரப்பூர்வமாக 24-09-2025 அன்று கையெழுத்திட்டனர்.
பொது நிர்வாகம்,மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு,சுற்றாடல் அமைச்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தால் €8 மில்லியன் மானியம் வழங்கப்படவுள்ளது.
அச்சுறுத்தலுக்கு உள்ளான சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலமும், இலக்கு வைக்கப்பட்ட பாதுகாப்பு உத்திகளை செயல்படுத்துவதன் மூலமும், நிலையான நில பயன்பாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலமும் பல்லுயிர் பாதுகாப்பிற்கு இந்த திட்டம் பங்களிக்கும். திடக்கழிவு மேலாண்மை அமைப்புகளுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கும் இந்த திட்டம் பங்களிக்கும்.
அரசாங்கத்தின் தேசிய கொள்கை அறிக்கையான 'ஒரு வளமான நாடு - ஒரு அழகான வாழ்க்கை' யில் சிறப்பிக்கப்பட்டுள்ளபடி, பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டிய அவசரத் தேவையுடன் இந்த திட்டம் ஒத்துப்போகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமநிலையான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் இலக்கு முடிவுகளை அடையவில்லை,ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த கூட்டாண்மை அந்த பயணத்தை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘’Global Gateway” ' கொள்கை மூலம் இதுபோன்ற திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்த பங்களிப்பு குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர் கார்மென் மொரேனோ கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையின் மிக முக்கியமான வளங்களில் பல்லுயிர் பெருக்கம் ஒன்றாகும், மேலும் இந்த திட்டத்தின் மூலம் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதன் மூலம் அதன் பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுபவம்,தொழில்நுட்பம் மற்றும் தனியார் துறை முதலீடு ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய கூறுகளாகும், இது இலங்கையின் கொள்கைகளை சர்வதேச சமூகத்துடன் இணைக்க ஒரு வாய்ப்பை வழங்கும். பல்லுயிரியலைப் பாதுகாப்பது உலகளாவிய ஆரோக்கியத்திற்கும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் பங்களிக்கிறது' .
ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர், இந்தத் திட்டம் இலங்கையின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் மற்றும் பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புடன் நன்கு ஒத்துப்போகிறது என்பதை வலியுறுத்தியதோடு, இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு ஒரு சான்றாகவும் அமையும் என்றும்,சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீண்டகால சமநிலையான பொருளாதார மீள்தன்மைக்கான எங்கள் கூட்டாண்மையில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது எனறு தெரிவித்துள்ளார்.