பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் 202 ஆண்டுகளாகியும் தீர்க்கப்படவில்லை - அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
லயன் அறைகளில் வாழ்ந்தாலும் அவர்களும் மனிதர்களே. எனவே அவர்களுக்கு காணி, வீட்டு உரிமத்தை வழங்குவது மாத்திரமின்று பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாம் உறுதியளித்ததை போன்று எவ்வாறேனும் 1700 ரூபாய் நாட் சம்பளத்தையும் பெற்றுக் கொடுப்போம் என மீண்டும் உறுதியளிக்கின்றேன்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களால் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 2 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கப் பெறுகிறது. அதனைக் கொண்டு நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டாலும், அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுவதில்லை. அந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தை தமது அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
வீட்டு மற்றும் காணி உரிமம் மாத்திரமின்றி வழங்கிய வாக்குறுதிக்கமைய பெருந்தோட்டத் தொழலாளர்களுக்கு எவ்வாறேனும் 1700 ரூபா நாட் சம்பளத்தையும் பெற்றுக் கொடுப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பண்டாரவளையில் 2056 பயனாளிகளுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் வீட்டுறுதிக்கான ஆவணத்தை வழங்கும் நிகழ்வு 12-10-2025அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மலைய மக்களுக்கு இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாளாகும். அந்த மக்கள் கடந்த 202 ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். பல பில்லியன் டொலர் அந்நிய செலாவணி வருமானத்தை ஈட்டி கொடுத்திருக்கின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களால் இலங்கைக்கு வருடாந்தம் சுமார் இரண்டு பில்லியன் டொலர் அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கின்றது.
அவர்களால் ஈட்டப்படும் டொலர் வருமானத்தால் நாட்டின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகின்ற போதிலும், அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதன் காரணமாக அந்த மக்கள் இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஹட்டன் பிரகடனம் முன்வைக்கப்பட்டது.
அந்தப் பிரகடனத்தின் ஊடாக காலம் காலமாக தீர்க்கப்படாமல் உள்ள மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் நிச்சயம் தீர்வு வழங்குவோம் என வாக்குறுதியளித்தோம். அந்த வகையில் இந்திய வீட்டு திட்டத்தின் நான்காம் கட்ட வீடமைப்பு நிர்மாண பணிகளை இன்று நாம் ஆரம்பிக்கின்றோம்.
முதலாம் கட்டத்தின் கீழ் 1300 வீடுகள் கடந்த ஆண்டு கையளிக்கப்பட்டன. வரலாற்றில் முதல்முறையாக ஒரே தடவையில் 2000 வீடுகளுக்கான நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. அவற்றுக்கான உரித்துக்கான ஆவணத்தை வழங்கி ஆரம்ப கட்டத்தை இன்று தொடங்குகின்றோம் .
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக வழங்கும் ஒத்துழைப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். உடையும் நிலையில் உள்ள வீடுகளில் இன்றும் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிறிய லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர். சில பகுதிகளில் செல்லப் பிராணிகளுக்கு இருக்கும் இடவசதி கூட பெருந்தோட்ட பிரதேசங்களில் பிள்ளைகளுக்கு இல்லை.
அந்த வகையில் இன்று கையளிக்கப்படும் 2056 வீடுகள் ஓரளவு முழுமையாக நிர்மாணிக்கப்பட்டவையாகும். இந்த வீடுகளை முழுமையாக நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம் நிதி உதவியை வழங்குகிறது. மின்சாரம், சுகாதாரம், நீர் மற்றும் வீதி அபிவிருத்தி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இலங்கை அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்படுகிறது. அது மாத்திரமின்றி அந்த மக்களுக்கு தமக்காக என ஒரு காணிக்கான உரித்து வழங்கப்படுகிறது. பத்து பேர்ச் காணிக்கான உரித்தும் வழங்கப்படுகிறது.
இந்த மக்கள் காலம் காலமாக துயரங்களை அனுபவித்து வந்தாலும் ஆட்சியாளர்களால் அந்த துயரங்களுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இலங்கை வரலாற்றில் மண்சரிவு அனர்த்தங்களை எதிர்கொண்டவர்களில் பெருந்தோட்ட மக்களே அதிகளவில் உள்ளடங்குகின்றனர் .
2014 ஆம் ஆண்டு மீறியபெத்த பிரதேசத்தில் லயன் குடியிருப்போன்று மண்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். 2023 பூநாகலை கபரகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 50 குடும்பங்கள் குடியிருப்புகளை இழந்து இன்றும் பாதுகாப்பற்ற மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலையில் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த 50 குடும்பங்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் செலவில் கபரகல பிரதேசத்தில் 50 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன. மண்சரிவு அபாய எச்சரிக்கை காணப்படுகின்ற மலையக மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமையளிக்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் நாம் கோரிக்கை விடுத்தோம்.
அதன் பிரதிபலனாக இன்று மண் சரிவு அபாயத்தை எதிர்கொண்டிருந்த 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமங்கள் கிடைக்கப்பெறுகின்றன. இதற்காக உயர்ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். எமக்கான வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொருவரதும் கனவாக இருக்கும். அவ்வாறிருக்கையில் 200 ஆண்டுகளாக தமக்கான இடமும் வீடும் இல்லாமல் ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருப்பது நியாயமா ?
லயன் அறைகளில் வாழ்ந்தாலும் அவர்களும் மனிதர்களே. எனவே அவர்களுக்கு காணி, வீட்டு உரிமத்தை வழங்குவது மாத்திரமின்று பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாம் உறுதியளித்ததை போன்று எவ்வாறேனும் 1700 ரூபாய் நாட் சம்பளத்தையும் பெற்றுக் கொடுப்போம் என மீண்டும் உறுதியளிக்கின்றேன்.
550 சதுர அடியில் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள் இரு அறைகள், சமையலறை, குளியலறை மற்றும் மலசலகூடம் என்பவற்றை உள்ளடக்கிய முழுமையாக நிறைவு செய்யப்பட்ட வீடுகளாகும் இதற்காக உதவி ஒத்துழைப்புகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் . உங்களது ஏனைய எதிர்பார்ப்புகளும் அடுத்தடுத்து படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கின்றேன் என்றார்.