இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான போதுமான நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் சர்வதேச உதவியை நாடவேண்டும்' என்றும் புதிய தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட புதிய பிரேரணை, 06-10-2025 அன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட 60/L1/Rev.1 எனும் பிரேரணை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இணையனுசரணை நாடுகளின் சார்பில் இப்பிரேரணையை பேரவையில் சமர்ப்பித்து உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி, இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் புதிய பிரேரணையில் உள்வாங்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் குறித்துத் தெளிவுபடுத்தினார்.
அதனைத்தொடர்ந்து இப்பிரேரணை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உரையாற்றினர்.
உறுப்புநாடுகளின் உரைகளின் பின்னர், இப்பிரேரணை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, இணையனுசரணை நாடுகள் முன்வைத்திருக்கும் புதிய தீர்மானத்தைத் தாம் நிராகரிப்பதாகக் குறிப்பிட்டார்.
நிறைவாக பேரவையின் தலைவர் இப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு உறுப்புநாடுகளில் எவரேனும் வாக்கெடுப்பைக் கோர விரும்புகிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். இருப்பினும் எவரும் வாக்கெடுப்பைக் கோராததன் காரணமாக, இலங்கை தொடர்பான 60/1 எனும் புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இப்புதிய தீர்மானத்தில் நல்லிணக்கம் மற்றம் சகல பிரஜைகளும் மனித உரிமைகளை அனுபவித்தல் என்பவற்றுக்கு அடிப்படையாக அமையக்கூடிய அதிகாரப்பகிர்வு சார்ந்த கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் எனவும், மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதுடன் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாக வட, கிழக்கு மாகாணசபைகள் உள்ளடங்கலாக சகல மாகாணசபைகளினதும் செயற்திறன்மிக்க இயங்குகையை உறுதிசெய்யவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று 'மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் பிரகாரம் பொருத்தமான சந்தர்ப்பங்களில் சர்வதேச மனித உரிமை மீறல் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத்தொடர்வதற்கான கடப்பாட்டினை உறுப்புநாடுகளின் அரசுகள் கொண்டிருக்கின்றன' என்றும் புதிய தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் வரை அதன் பிரயோகம் இடைநிறுத்தப்படவேண்டும் எனவும், பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காகக் கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்டத்துக்கு ஏற்றவாறு அமையவேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி 'இலங்கையில் பல்வேறு மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், அதுசார்ந்து தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகளுக்கு அவசியமான போதிய வளங்கள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். அத்தோடு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் சுயாதீனமானதும், செயற்திறன்மிக்கதுமான இயங்குகை உறுதிப்படுத்தப்படவேண்டும்.
மேலும் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான போதுமான நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் சர்வதேச உதவியை நாடவேண்டும்' என்றும் புதிய தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தீர்மானத்தின் பிரகாரம், கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக ஆற்றப்படவேண்டிய பணிகள் அனைத்தும் காலநீடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.
அத்தோடு உயர்ஸ்தானிகர் அலுவலகமானது இலங்கை தொடர்பில் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடரில் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிப்பதுடன், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த விரிவாக அறிக்கையை 66 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவேண்டும்.





