பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை மீளாய்வு செய்யுங்கள் - ஐ.நா.
ஏற்கனவே முன்மொழியப்பட்ட சட்டமூலங்களில் காணப்பட்ட பல குறைபாடுகள் இச்சட்டமூலத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் மிகப்பாரதூரமான உள்ளடக்கங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், இதனை சட்டமாக்குவதற்கு முன்னர் அரசாங்கம் சகல தரப்பினருடனும் கலந்தாலோசித்து, மீளாய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
உத்தேச பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பயங்கரவாதத்தடை சட்டத்துக்கு பதிலாக கடந்த காலங்களில் முன்மொழியப்பட்ட வரைவுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில் சில முன்னேற்றகரமான விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் ஏற்கனவே முன்மொழியப்பட்ட சட்டமூலங்களில் காணப்பட்ட பல குறைபாடுகள் இச்சட்டமூலத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பயங்கரவாத குற்றங்கள் எனும் பதத்துக்கான தெளிவற்ற மற்றும் போதிய துல்லியமற்ற வரைவிலக்கணம், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஏனைய சிவில் நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடிய கட்டுப்பாடுகள், நிர்வாக ரீதியான தடுப்புக்காவல், போதிய நீதித்துறைக் கண்காணிப்பு இன்மை, கைது மற்றும் சோதனையிடல் என்பவற்றுக்கான பரந்துபட்ட அளவிலான அதிகாரங்கள், நிறைவேற்றதிகாரத்தின் வசமுள்ள எதேச்சதிகாரம் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு கரிசனைகள் தற்போதைய சட்டமூலம் தொடர்பில் காணப்படுகின்றன.





