முல்லைத்தீவில் 432,000 ஏக்கர் நிலப்பரப்பை வனவளப்பாதுகாப்பு திணைக்களம் ஆக்கிரமிப்பு - ரவிகரன் எம்.பி
வனப் பாதுகாப்புத் திணைக்களம் தற்போதுள்ள வனப்பகுதியை 16 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 598,000 ஏக்கராக காணப்படுகின்ற நிலையில் அதில் 432,000 ஏக்கர் நிலப்பரப்பை வனவளப்பாதுகாப்புத் திணைக்களம் ஆக்கரமித்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 25-11-2026 அன்று நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் மேலதிக கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்,தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களம் அதிகமான நிலப்பரப்புக்களை அபகரித்து வைத்திருக்கின்றனர்.குறிப்பாக 5,98000 ஏக்கர் அளவில்தான் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய மொத்த நிலப்பரப்புக் காணப்படுகின்றது.அதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏறத்தாள 4,32000ஏக்கர் நிலப்பரப்பை வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிலுள்ளது.
இவ்வாறு வனவளப்பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளுக்குள் மக்களுடைய நெற்செய்கைக் காணிகள், மக்களின் பயன்பாட்டிலுள்ள காணிகள்,சிறுதானிய பயிர்ச்செய்கைக்காணிகள் என்பனவும் அடங்குகின்றன. இதனால் அந்த காணிகளுக்குரிய மக்கள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.எனவே இந்தக் காணிகளை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, இந்தத் திணைக்களங்கள் மக்களின் காணிகளைக் கையகப்படுத்தியுள்ளனவா என்பது வேறொரு விடயம். ஆனால், மக்களுக்குச் சொந்தமான காணிகளை இயன்றவரை விடுவிக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.
அதேபோல வனப் பாதுகாப்புத் திணைக்களம் தற்போதுள்ள வனப்பகுதியை 16 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அது மிகவும் காலத்திற்குப் பொருத்தமான ஒரு நடவடிக்கையாகும். அப்படியானால்,அதற்கும் இந்தக் காணிகளைத் தான் நாங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
ஆனால்,மக்களுக்குச் சொந்தமான உறுதியான காணிகள் அல்லது அவர்கள் முன்னர் பயன்படுத்திய காணிகள் இருக்குமானால்? அந்த காணிகளை விடுவித்துக் கொடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஏற்கனவே அந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பாதுகாப்பு அமைச்சின் வசம் இருந்த காணிகளில் ஒரு பகுதி கூட இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களுக்குத் தேவையான காணிகளை வழங்குவதற்காக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.





