கொவிட்-19 பெருந்தொற்று சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டமை குறித்து ஆராய பாராளுமன்ற விசேட குழு
பாராளுமன்ற விசேட குழுக்களை நியமிப்பது தொடர்பான மூன்று பிரேரணைகளுக்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றும் நடவடிக்கையின்போது, பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள், கலாசார விழுமியங்கள் மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவற்றை மீறிச் செயற்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அதுதொடர்பான விடயங்கள் குறித்து விசாரணை செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
வரவு,செலவுத்திட்ட காலப்பகுதியில் மூன்று சட்டமூலங்களை இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று முன்தினம் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளைய தினம் (22) வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தை நடத்துவதற்கும், பி.ப 6 மணி முதல் பி.ப 6.30 மணி வரை வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், டிசம்பர் 05ஆம் திகதி சனிக்கிழமை, மு.ப 11மணி முதல் பி.ப 6 மணிவரை இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தையடுத்து பி.ப 6மணி முதல் பி.ப 9மணிவரை இலங்கை கிரிக்கெட் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நடத்தப்படவுள்ளது.
டிசம்பர் 07ஆம் திகதி திங்கட்கிழமை, மு.ப 11 மணி முதல் பி.ப 6மணி வரை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தையடுத்து பி.ப 6 மணி முதல் பி.ப 6.30 மணி வரை விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதம் மற்றும் மூன்றாவது மதிப்பீட்டை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. (இச்சட்டமூலம் 2026 ஒக்டோபர் 23ஆம் திகதி இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது)
பாராளுமன்ற விசேட குழுக்களை நியமிப்பது தொடர்பான மூன்று பிரேரணைகளுக்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றும் நடவடிக்கையின்போது, பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள், கலாசார விழுமியங்கள் மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவற்றை மீறிச் செயற்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அது தொடர்பான விடயங்கள் குறித்து விசாரணை செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சுயாதீன இளைஞர் ஆணைக்குழுவொன்றை நிறுவுவது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றையும், காவந்திஸ்ஸ யானையின் மரணம், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை ஆராய்ந்து, இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமித்தல் ஆகிய மூன்று பிரேரணைகளுக்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.





