அனைத்து அரச ஊழியர்களுக்கும் மூன்றாம் கட்ட சம்பள உயர்வு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும்: பிரதமர் ஹரிணி
பிரதமர் அலுவலகத்தில் கல்வி தொடர்பான டிஜிட்டல் செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டு, செயலூக்கத்துடன் இயங்கி வருவதாகவும், பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கான முறையான தொடர்நடவடிக்கை செயன்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மூன்றாவது சம்பள உயர்வு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் எனவும், பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் மறைந்து, எதிர்க்கட்சி தனிப்பட்ட முறையில் பொய்யான தகவல்களைச் சமூகத்தில் பரப்புவது குறித்துத் தாம் கவலையடைவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-11-2026 அன்று இடம்பெற்ற விசேட செலவின அலகுகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், அடிப்படைச் சம்பளத்தை மூன்று கட்டங்களாக உயர்த்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், 2025ஆம் மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் முதலாவது, இரண்டாவது கட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மூன்றாவது சம்பள உயர்வு 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், நிலவும் சம்பள, ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை 2027ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கிடைக்கப்பெறவுள்ளது, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் அம்முரண்பாடுகளைச் சீர்செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பிரதேச செயலக மட்டம் வரை இணையவழி (Online) முறைமையூடாகப் பரவலாக்கியதன் காரணமாக, 2025ஆம் ஆண்டில் 1,664 ஆகக் காணப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டளவில் 27,948 ஆக அதிகரித்துள்ளதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்க நிர்வாகத்தின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் நிதியத்தின் நிதி வலுவு 150 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சுமார் 2,000 மூக்குக்கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதோடு, அரச வைத்தியசாலைகளில் கண்புரைச் சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கும் நோக்கில், அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் 570 பேருக்கும் நுவரெலியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் 600 பேருக்கும் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 100 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு, அதன் பயன்களும் உள்ளடக்கப்படும் நோய் நிலைமைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் கல்வி தொடர்பான டிஜிட்டல் செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டு, செயலூக்கத்துடன் இயங்கி வருவதாகவும், பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கான முறையான தொடர்நடவடிக்கை செயன்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைச் சமூகம் மற்றும் ஏனைய அமைச்சுகளை ஒன்றிணைத்து 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்த பிரதமர், ஜனாதிபதி அலுவலகத்தில் வீண்விரயத்தையும் ஊழலையும் குறைத்து சேவை தரத்தை உயர்த்துவதற்கும், சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கும், மதத் தலைவர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்குத் தகுதியான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேசியப் பொலிஸ் ஆணைக்குழுவின் முறைப்பாடுகள் மீதான விசாரணை வீதம் ஆண்டுதோறும் அதிகரித்துள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அரச சேவை ஆணைக்குழுவும் கொள்கை வகுப்பதிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்கிறது.
எதிர்க்கட்சியின் ஆக்கபூர்வமான, விமர்சனங்களை அரசாங்கம் எப்போதும் ஏற்றுக்கொள்ளும் போதிலும், பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் மறைந்து, தனிப்பட்ட முறையில் பொய்யான தகவல்களைச் சமூகத்தில் பரப்புவது கவலைக்குரியது எனப் பிரதமர் வலியுறுத்தினார். நாடு மாற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் இத்தகைய தருணத்தில், எதிர்க்கட்சி நாகரிகமாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் என்றார்.





