செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிளுக்கு சட்டத்தின் முன் தண்டனை - அரசாங்கம்
அந்த குறிப்பிட்ட பகுதியில் குறுகிய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள், இந்திய இராணுவம், மற்றும் ஏனைய துணை இராணுவக் குழுக்களின் கட்டுப்பாடுகள் இருந்துள்ளன்
செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் தண்டனை வழங்கப்படும். இந்த பேரவலத்திற்கு விடுதலை புலிகளா, இந்திய இராணுவமா அல்லது இலங்கை படைகளா என்பதை விசாரணையின் இறுதியிலேயே தெரியவரும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 28-07-2026அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
1998 மற்றும் 1999 காலப்பகுதியில் இத்தகவல்கள் வெளிவந்த போதிலும் எந்தவொரு அரசாங்கமும் இதனைத் தொடர்ந்து தேடவில்லை. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் மூலமாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு தீவிரமாக இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் கூட அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளன.
தற்போது இந்த செயல்பாட்டில் பல கட்டங்கள் உள்ளன. முதற்கட்டமாக, உடலங்களை அடையாளம் காண வேண்டும். இது தொடர்பாகப் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன, தேவைப்பட்டால் மீண்டும் வெளியிடப்படும். காணாமல் போன தங்கள் உறவினர்கள் அங்கு இருக்கலாம் என சந்தேகப்படுபவர்களிடம் இருந்து மரபணு மாதிரிகளைப் பெற முடியும். இதுவரை அவ்வாறு மரபணு மாதிரிகள் பெறப்படவில்லை. அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முன்னாள் இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்ஷவின் கவலைப் பொறுத்தவரை, தகவல் இருப்பதாக அவர் கூறியதைத் தொடர்ந்து காணாமல் போனோர் பற்றிய அலுவலகப் பிரதிநிதிகளும் காவல்துறையினரும் வாக்குமூலம் பெற அனுப்பப்பட்டனர். ஆனால் அவர் நேரடியாக அனைத்து உண்மைகளையும் கூறாமல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை எதிர்பார்க்கிறார். அவர் கூறுவது உண்மையா அல்லது நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் தப்பிப்பதற்காகக் கூறுகிறாரா என்பது தெரியவில்லை.
உண்மையைக் கூற நினைப்பவர் ஆரம்பத்திலேயே கூறியிருக்கலாம். இருப்பினும், அவர் ஒரு முக்கிய சாட்சியா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவரது பாதுகாப்பை 100 சதவீதம் அரசாங்கம் உறுதிப்படுத்தும். அடுத்து, குற்றமிழைத்தவர்களைக் கண்டறிய வேண்டும். ஆனால் விசாரணை இன்னும் அந்த நிலைக்குச் செல்லவில்லை. கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் இயல்பான மரணத்தால் ஏற்பட்டவையா அல்லது தாக்குதல்களால் ஏற்பட்ட காயங்களா என்பதையே முதலில் கண்டறிய வேண்டியுள்ளது.
மேலும், அந்த குறிப்பிட்ட பகுதியில் குறுகிய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள், இந்திய இராணுவம், மற்றும் ஏனைய துணை இராணுவக் குழுக்களின் கட்டுப்பாடுகள் இருந்துள்ளன் இராணுவம் அதற்குப் பின்னரே அங்கு வந்தது எனவே நபர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் உரிய விசாரணை செய்யப்படும் என்றார்.
குருக்கள்மடம் புதைகுழி குறித்த தொடர் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. விசாரணை முடிவுகளின்றி நாங்கள் எந்த முடிவுக்கும் வரப்போவதில்லை என்றார்.





