மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படும் - அமைச்சர் கிரிஷாந்த அபேசேன
மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து அரசாங்கம் எதிர்வரும் மாதத்துக்குள் உறுதியான தீர்மானத்தை அறிவுறுத்த வேண்டும் என்று சகல எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தும் நிலைப்பாட்டுக்குள் உள்ளோம்.தேர்தலை கண்டு அச்சமடையவில்லை. வெளியக காரணிகளால் ஏற்பட்ட நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளோம் என விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.
கண்டியில் 15-05-2026அன்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எவ்வகையில் குறைகளை கண்டுப்பிடிக்கலாம் என்ற சிந்தனையுடன் தான் எதிர்க்கட்சியினர் செயற்படுகிறார்கள்.ஏதாவது ஒரு விடயத்தை பற்றிக் கொள்கிறார்கள்.போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். அவை ஒருவாரத்துக்கு கூட தாக்குப்பிடிப்பதில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் நகைப்புக்குரியன. அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை போல் செயற்பட கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவருக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம்.
மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். தேர்தலை பிற்போட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்றார்.
மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து அரசாங்கம் எதிர்வரும் மாதத்துக்குள் உறுதியான தீர்மானத்தை அறிவுறுத்த வேண்டும் என்று சகல எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட செயற்குழு மூன்று மாதகாலத்துக்குள் தமது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கை சமர்ப்பித்தலை தாமதப்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.





