குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - ஸ்ரீநேசன் எம்.பி.
குற்றம்புரிபவர்கள் தண்டிக்கடப்பட வேண்டும். அவர்கள் தப்பிக்க இடமளிக்கப்படக்கூடாது.
குற்றம் செய்தவர்கள் பாதுகாக்கப்படும் சட்டக்கட்டமைப்பு மற்றும் அரசியல் கட்டமைப்பு இருக்குமாக இருந்தால் இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் செயற்படுகின்றது. இன்னுமொரு தரப்பு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்று செயற்படுகிறது. எவ்வாறாயினும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 11-06-2026 அன்று நடைபெற்ற மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள் ) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் பல வழக்குகள் தேங்கிக்கிடப்பதுடன், 10, 15 வருடங்களுக்கும் மேலாக வழக்குகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அந்த வகையில் மத்தியஸ்த சபை இதற்கு முக்கிய விடயமாக அமையும். வீண் செலவுகள் மற்றும் வீண் நேர விரயங்களை குறைத்துக்கொள்வதற்கு இது உதவும் என்று நாங்கள் நம்புகின்றோம். சமூக பிரச்சினைகளை சமூகத்தில் உள்ள பெரியவர்கள் ஊடாக தீர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும்.
இதேவேளை குற்றவியல் சட்டங்கள் தொடர்பான விடயத்தில் சர்வதேச ரீதியிலும் கட்டாயமாக பரஸ்பர ஒத்துழைப்பு இருப்பதன் மூலமாக நீண்ட காலமாக நாட்டை போதைப்பொருள் களஞ்சியமாக மாற்றிக்கொண்டிருப்பவர்கள் கைது செய்யப்படாமல் அதன் கீழுள்ள சிறியவர்களை கைது செய்வதன் மூலம் அந்த இராச்சியத்தை கட்டுப்படுத்த முடியாது. இதனால் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த வேண்டும். அந்த வகையில் சர்வதேச நாடுகளில் மறைந்திருப்பவர்கள் கைது செய்யப்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம். அத்துடன் சமூகத்தின் பிரமுகர்கள் என்று கூறிக்கொள்பவர்கள்கூட இந்த போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களுன் தொடர்புபட்டுள்ளனர். இந்நிலையில் குற்றம்புரிபவர்கள் தண்டிக்கடப்பட வேண்டும். அவர்கள் தப்பிக்க இடமளிக்கப்படக்கூடாது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் அந்த சம்பவத்தின் பின்னர் மூன்று ஜனாதிபதிகள் ஆட்சி செய்துள்ளனர். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகள் யார் என்பது புரியாத நிலைமை காணப்பட்டது. இந்த குற்றத்தை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் பாதுகாக்கப்படும் சட்டக்கட்டமைப்பு மற்றும் அரசியல் கட்டமைப்பு இருக்குமாக இருந்தால் இந்த நாடு முன்னேறாது. எவ்வாறாயினும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. ஆனபோதும் இன்னுமொரு தரப்பு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்று செயற்படுகின்றன. எவ்வாறாயினும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.





