ரவி, ஷானிக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? - சர்வஜன அதிகாரம்
தேசிய மக்கள் சக்தியின் மேடைகளில் ஏறியதன் காரணத்தால் இவர்கள் குற்றமற்றவர்களாக மாற்றப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகின்றது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறைத் தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறிய குற்றத்துக்காக முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய காலகட்டத்தில் பொறுப்பான பதவிகளில் இருந்த ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என சர்வஜன அதிகாரம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமையகத்தில்01-08-2026அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் பிரியங்கார மகாமுல்லகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் உளவுத்துறைத் தகவல்கள் துல்லியமாகக் கிடைத்திருந்தபோதிலும் அதனைத் தடுக்கத் தவறியதாலேயே இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அன்றைய காலத்தில் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் உளவுத்துறை சார்ந்த முக்கிய பொறுப்புக்களில் இருந்த ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் மீது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபோதிலும், தற்போதைய அரசாங்கத்தில் அவர்கள் பிரதான அதிகாரிகளாகச் செயற்பட்டு வருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் மேடைகளில் ஏறியதன் காரணத்தால் இவர்கள் குற்றமற்றவர்களாக மாற்றப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகின்றது. அத்துடன், தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் தந்தையான இப்ராஹிம் நானா குற்றமற்றவர் என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தமை குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
அன்று வடக்கில் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் இளைஞர்களின் மனங்கள் தூண்டப்பட்டு, சயனைட் குப்பி கழுத்தில் கட்டப்பட்டு தீவிரவாதப் பாதைக்கு இட்டுச்செல்லப்பட்ட அதே மனநிலையே, இன்று சில மதராசா பாடசாலைகளில் தீவிரவாதப் போதனைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. அன்று எதிர்க்கட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறிய தற்போதைய ஜனாதிபதி, அரசாங்கம் ஆட்சியமைத்து இரு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் இவ்வாறான தீவிரவாதப் போதனைகளைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அரசாங்கத்துக்கு ஆதரவான அதிகாரிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதும், ஏனையோர் மட்டும் தண்டிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.





