கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரவிகரன் எம்.பி.
கேப்பாப்பிலவு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அவர்களின் காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.
கேப்பாபிலவு மக்கள் தமது காணி விடுவிப்பினை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த அரசாங்கம் தமது காணிகளை விடுவிக்கும் என்ற பெருத்த எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் போராட்டங்களை மேற்கொள்ளாது தமது பூர்வீக காணி விடுவிப்பதற்காக கேப்பாப்புலவு மக்கள் காத்திருக்கின்றனர்.கேப்பாப்பிலவு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அவர்களின் காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் இராணுவத்துடன் தாம் கூடிய விரைவில் கலந்துரையாடி, அந்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட முடிவுகள் தம்மால் வெளிப்படும் என ஜனாதிபதி பதிலளித்தார்.
ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு துறைசார் மேற்பார்வைக்குழுவில் கலந்துக்கொண்டு மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
கேப்பாபுலவு காணி விடுவிப்பு விடயத்தில், கடந்த கூட்டத்தில் இராணுவத்தினரிடமிருந்து ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவால் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது. எனினும் இராணுவத்தினரிடமிருந்து முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லையெனச் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.இந்நிலையில் இராணுவத்திற்கு அந்தக் காணிகள் தேவையென காணி உரிமையார்களிடம் இராணுவத்தால் ஏற்கனவே கோரப்பட்டதா எனவும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த காணிவிடயத்தில், காணி உரிமையாளர்கள் தமக்கு சீரான அறிவித்தல்கள் எதனையும் தரவில்லை எனவும்,அது தொடர்பாக தாம் விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பிப்பதாக இராணுவத்தினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை இவ்விடயத்தில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளுக்கு மாற்றீடாக 44காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டிருந்தாலும், 11பேருக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்படவில்லை என ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்தவிடயத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் 11பேருக்கான மாற்றுக்காணி வழங்கும் விடயத்தில் கவனஞ் செலுத்தியிருக்கலாம் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இதன்போது கேப்பாப்புலவு மக்களின் பூர்விகக் காணிகளை விடுவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார். குறிப்பாக 1818ஆம் ஆண்டளவிலிருந்து கேப்பாப்பிலவில் மக்கள் குடியிருப்பதாக வரலாறுகள் இருக்கின்றது.அந்தவகையில் மக்களின் வாழ்வாதார மூலங்களுடன்கூடிய பூர்வீக குடியிருப்புக் காணிகளே இவ்வாறு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு முன்னைய காலங்களில் கேப்பாப்பிலவுப் பகுதியில் இராணுவமுகாம்கள் எவையும் இருந்திருக்கவில்லை.இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு மக்கள் தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்வதற்கு வந்தபோது அவர்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருந்தனர்.
இத்தகைய சூழலில் அயற் கிராமமான சீனியாமோட்டை என்னும் கிராமத்தில் இந்த மக்கள் குடியேற்றப்பட்டனர். குறிப்பாக ஒரு குடும்பத்திற்கு 0.25ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டு அந்த மக்கள் குடியேற்றஞ் செய்யப்பட்டனர். இந்நிலையில், இது ஒரு தற்காலிக ஏற்பாடாகும். இராணுவம் மக்களின் காணிகளில் இருந்து வெளியேறிய பிற்பாடு, மக்கள் அவர்களது சொந்தக்காணிகளில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என முல்லைத்தீவு மாவட்டசெயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் என்பவற்றினால் மக்களுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டது.
அவ்வாறு தெரிவிக்கப்பட்டபோதும் கேப்பாப்பிலவில் பகுதியளவான காணிகளே விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டனர்.அந்தவகையில் இன்னும் 55பேருக்குரிய 59.9ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. குறித்த விடயத்தை முல்லைத்தீவு மாவட்டசெயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.அத்தோடு ஏற்கனவே குறித்த கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மவட்டசெயலகத்தில் இருந்து பெறப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளுடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதற்கு அமைவாக,ஜனாதிபதி செயலகம் இராணுவத்தரப்பினருக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன், அந்த கடிதம் எனக்கும் பிரதியிடப்பட்டுள்ளது என்றார்.
கேப்பாபிலவில் விடுவிக்கப்பட வேண்டியுகாணிகள் தொடர்பான விவரங்கள் மற்றும் ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதிகள் என்பவற்றை ஜனதிபதியிடம் இதன்போது நேரடியாகக் கையளித்தார். அத்தோடு மக்களுடைய இந்தகாணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
குறிப்பாக இராணுவத்தினர் வெளியேறிய பிற்பாடு சொந்தக்காணிகளில் குடியேற்றப்படுவீர்கள் என்ற உத்தரவாதத்துடன் ஒருகுடும்பத்திற்கு 0.25ஏக்கர் காணிவீதம் 44குடும்பங்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு 11பேருக்கு மாற்றுக்காணிகள் எவையும் வழங்கப்படவில்லை. எனினும் இராணுவம் அபகரித்து வைத்துள்ள பகுதியில் மக்கள் ஒவ்வொருவருக்கும் 1ஏக்கருக்கும் மேலான பூர்வீக காணிகள் இருப்பதையும் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்தோடு மக்களின் பூர்வீகக் காணிகள் நந்திக்கடல் களப்பின் அருகோடு இருப்பதனால், அவர்களுக்கு நந்தித்கடல் களப்பு பெரும் வாழ்வாதார வளமாக இருந்துவந்துள்ளது. இதுதவிர இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக காணிகள் ஒவ்வொன்றுக்குள்ளும் தென்னை,உள்ளிட்ட பல்வேறு பலன்தரு மரங்கள் காணப்படுவதுடன்,பயிர்ச்செய்கை நிலங்களும் காணப்படுகின்றன. இத்தகைய வளம்மிக்க காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதால் அந்த மக்களின் வாழ்வாதாரம் பலவழிகளிலும் பாதிக்கப்படுகின்றது.எனவே அந்தக்காணிகளை உடனடியாக விடுவிப்புச்செய்து, மக்களை அங்கு மீளக்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
அத்தோடு கேப்பாபிலவு மக்கள் தமது காணி விடுவிப்பினை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் இந்த அரசாங்கம் தமது காணிகளை விடுவிக்கும் என்ற பெருத்த எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் போராட்டங்களை மேற்கொள்ளாது தமது பூர்வீக காணிவிடுவிப்பிற்காக கேப்பாப்புலவு மக்கள் காத்திருக்கின்றனர் என்பதை இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். எனவே கேப்பாப்பிலவு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அவர்களின் காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் இராணுவத்துடன் தாம் கூடியவிரைவில் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அந்தகலந்துரையாடலில் எட்டப்பட்ட முடிவுகள் தம்மால் வெளிப்படுமெனவும் ஜனாதிபதி பதிலளித்தார்.





