தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தான் தயார்: நிமல் சிறிபால டி சில்வா
இளைஞர், யுவதிகள் அரசியல் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்க வேண்டும். எனக்கு ஜனாதிபதியாகும் கனவு இல்லை. ஜனாதிபதியாகும் கனவில் இருப்பவர்கள் சுதந்திர கட்சி தலைமைத்துவத்தைக் கோருகின்றனர்.
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக் கூடிய இயலுமையுடைய எந்தவொரு நபருக்கும் கட்சி தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தான் தயாராக இருக்கின்றேன். ஜனாதிபதியாகும் கனவில் இருப்பவர்கள் சுதந்திர கட்சி தலைமைத்துவத்தைக் கோருகின்றனர். அவ்வாறானவர்கள் கட்சிக்குள் வந்து கோரிக்கை விடுத்தால் அது குறித்து ஆராய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பு – டாலி வீதியிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் 03-04-2025 அன்று இடம்பெற்ற 74 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய நிமல் சிறிபால டி சில்வா,
புதிய குழுக்களுக்கு பொறுப்புக்களை கையளிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். இளைஞர், யுவதிகள் அரசியல் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்க வேண்டும். எனக்கு ஜனாதிபதியாகும் கனவு இல்லை. ஜனாதிபதியாகும் கனவில் இருப்பவர்கள் சுதந்திர கட்சி தலைமைத்துவத்தைக் கோருகின்றனர். அவ்வாறானவர்கள் கட்சிக்குள் வந்து ஜனாதிபதியாகக் கூடிய தகுதி தமக்கிருந்தால் அதனை நிரூபித்தால் பொறுப்பினை வழங்க நாம் தயாராகவுள்ளோம் என்றார்.
இதன் போது உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏனைய கட்சி உறுப்பினர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. அந்த பழிவாங்கலுக்குள் நானும் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். 52 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டேன். நாட்டில் செயற்பாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் ஏதேனுமொரு வகையில் முடக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம் என்றார்.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன கலந்து கொண்டிருந்ததோடு, சுதந்திர கட்சியின் மேலும் பல சிரேஷ்ட உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். எவ்வாறிருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கவில்லை.





