சேனைப்பயிர் செய்கையாளர்களின் பிரச்சினையை பாராளுமன்றுக்கு கொண்டு செல்வோம்: சஜித்
தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து, அரசாங்கத்திற்கு சுமை கொடுக்காது சுதந்திரமான வாழ்க்கையை இம்மக்கள் முன்னெடுத்து வாழ்ந்தாலும், இன்று தீர்வுகளை வழங்காமையால் அவர்களை ஏழ்மை நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளி வருகின்றது.
சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மொனராகலை மாவட்டத்தில் உள்ள கொட்டியாகல 99 சந்திப் பகுதியில் 31-08-2025 நடைபெற்ற கொடியாகல விவசாயிகளின் காணிப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
விவசாயிகள் தங்களது மானியங்களையோ அல்லது நிதி உதவியையோ கேட்கவில்லை, மாறாக பல தசாப்தங்களாக தாம் பயிரிட்டு வரும் நிலத்தின் மீதான உரிமையைத்தான் கேட்கின்றனர். இவர்கள் எதிர்ந்கொண்டுவரும் இந்த பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரவேன்.
சோளம், தர்பூசணி மற்றும் வெண்டிக்காய் ஆகியவற்றை பயிரிடுகின்ற 5,000 முதல் 6,000 குடும்பங்கள், 25,000 ஏக்கரில் பல தசாப்தங்களாக பாரம்பரியமாக பயிரிட்டு வருகின்றனர். அவர்கள் தமது சேனைப் பயிர் செய்கையின் நிலத்துக்கான உரிமையைக் கோரி நிற்கின்றனர்.
இந்த விவசாயிகள் வாழும் உரிமை, வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் செய்யும் உரிமையைக் கோரி நின்ற போதிலும், இன்று அது பறிக்கப்பட்டுள்ளது .இந்தப் பிரச்சினைகளை ஆளும் தரப்பு அமைச்சர்களிடம் கொண்டு வரப்படும்போது, அவர்கள் அபத்தமான பதில்களை வழங்குகின்றனர். இந்தப் பிரச்சினைகளை மாவட்ட அபிவிருத்திக் குழு மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு அமைச்சரவை அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து, அரசாங்கத்திற்கு சுமை கொடுக்காது சுதந்திரமான வாழ்க்கையை இம்மக்கள் முன்னெடுத்து வாழ்ந்தாலும், இன்று தீர்வுகளை வழங்காமையால் அவர்களை ஏழ்மை நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளி வருகின்றது.
எனவே விவசாயிகளின் இந்த உரிமையைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன் நிற்கும். ஜனநாயக முறையில் இதற்காக முடிந்தவரை உரத்த குரலை எழுப்பும். என்றார்.





