பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பை தடுக்க புதிய நிதி தடைகள் - பாதுகாப்பு அமைச்சு அதிரடி நடவடிக்கை
அனைத்து பட்டியலிடல் மற்றும் சொத்து முடக்கும் நடவடிக்கைகளும் உறுதியான ஆதாரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு பரிசீலனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைத் தடுக்கும் கட்டமைப்பை, இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள் மீதான புதிய கவனத்தை பலப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுக்கும் நோக்கில், இலக்குவைத்த நிதி தடைகள் (Targeted Financial Sanctions – TFS) தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
பயங்கரவாதம் அல்லது பயங்கரவாத நிதியளிப்பில் ஈடுபட்டுள்ளதாக நியாயமான காரணங்களின் அடிப்படையில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அமைப்புகளின் நிதி மற்றும் நிதியல்லாத சொத்துகளை முடக்கும் வகையில் இந்த தடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த இலக்குவைத்த நிதி தடைகள், 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்ட 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஒழுங்குமுறையின் மூலம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1373 (2012) இற்கு அமைவாக செயல்படுத்தப்படுகின்றன.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒருவர் அல்லது நிறுவனம் பட்டியலிடப்பட்ட பின்னர், அவர்களின் வங்கி கணக்குகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் நிலம், வீடு, வாகனம், நகைகள் உள்ளிட்ட சொத்துகளை பயன்படுத்துதல், விற்பனை செய்தல், வாடகைக்கு விடுதல் அல்லது மாற்றுதல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்படுகின்றன.
இலக்குவைத்த நிதி தடைகளை விதிக்கும் அதிகாரம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு உட்பட்டதாகும். நிர்வாக மற்றும் செயற்பாட்டு நோக்கங்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் 'தகுதி பெற்ற அதிகாரியாக' நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து பட்டியலிடல் மற்றும் சொத்து முடக்கும் நடவடிக்கைகளும் உறுதியான ஆதாரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு பரிசீலனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த இலக்குவைத்த நிதி தடைகள், பயங்கரவாதத்தை அதன் மூலத்திலேயே கட்டுப்படுத்துவதுடன், இலங்கையின் நிதி அமைப்பை பாதுகாப்பதிலும், ஐக்கிய நாடுகள் மற்றும் நிதி செயல் நடவடிக்கை குழு போன்ற சர்வதேச அமைப்புகளின் கடமைகளை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், தகுதி பெற்ற அதிகாரியின் அலுவலகம் www.competentauthority.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறு, பயங்கரவாத நிதியளிப்பைத் தடுப்பதன் மூலம், நாட்டின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை தனது அர்ப்பணிப்பை வலியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





