நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பு அரசாங்கம் தொடர்ந்தும் பரிசீலனை
தற்போது மேல் நீதிமன்ற நீதிபதிகள் 61 வயதிலும், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் 60 வயதிலும் ஓய்வுபெறுகின்றனர்.
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை தலா இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் தொடர்ந்து பரிசீலித்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனுபவமிக்க நீதிபதிகளை நீண்ட காலம் சேவையில் தக்கவைத்துக் கொள்வதே இதன் நோக்கம் என்றும் முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மேல் நீதிமன்ற நீதிபதிகள் 61 வயதிலும், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் 60 வயதிலும் ஓய்வுபெறுகின்றனர். மூத்த நீதிபதிகள் பலர் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் தருவாயில் ஓய்வுக்காலத்தை எட்டிவிடுவதால், அவர்களது நீண்டகால அனுபவத்தை உயர் நீதிமன்றங்கள் இழப்பதைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 'கீழ்மட்டத்திலிருந்து மேல்நோக்கிய' புதிய முறையின் கீழ் முதற்கட்டமாக நீதிவான் நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப 50 புதிய நீதிவான்கள் நியமிக்கப்படவுள்ளதோடு, அதன் பின்னரே உயர் நீதிமன்றங்களில் நிலவும் தலா நான்கு வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன நீதிபதிகளின் வயது நீடிப்பு நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





