ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு தயாராகவுள்ளோம் - டி.வி.சானக எம்.பி.
ஊழலை ஒழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊழல்வாதிகளை பாதுகாக்கிறார்கள்.
தரமற்ற நிலக்கரி கொள்வனவால் ஏற்பட்ட பல மில்லியன் ரூபா நட்டத்துக்கு பொறுப்புக்கூறுவது யார்.நிலக்கரி தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி விடயங்களை முன்வைப்பதற்கு தயாராகவுள்ளோமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள பூரண அதிகாரமிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: ஊழலை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஊழலை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது. அமைச்சர்கள் தவறுகளை தெரிந்து செய்கிறார்களா அல்லது தெரியாமல் செய்கிறார்களா என்பது தெரியவில்லை. ஏதேனும் குறைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியவுடன் இரகசியமாக குறைகளை திருத்திற் கொள்கிறார்கள். பின்னர் எதிர்க்கட்சியினரை விமர்சிக்கிறார்கள்.
நிலக்கரி கொள்வனவில் பாரியதொரு மோசடி இடம்பெற்றுள்ளது. புதிய நிறுவனத்துக்கு விலைமணுகோரல் வழங்கப்பட்டுள்ளது.தரமற்ற நிலக்கரியால் பாரிய விளைவுகள் ஏற்படும். அவசர தேவைக்கான முறையான காரணிகள் ஏதும் இல்லாத வகையில் தரமற்ற வகையில் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். முழு அமைச்சரவையும் எதிர்காலத்தில் சிறைச் செல்ல நேரிடும்.
எதிர்க்கட்சிகளை குற்றஞ்சாட்டிக் கொண்டு முறையற்ற வகையில் செயற்படுவதை அரசாங்கம் பிரதான செயற்பாடாக கொண்டுள்ளது. நான் முன்வைத்த பகிரங்க சவாலை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்துக்கு வெளியில் எவரும் இவ்விடயம் தொடர்பில் விவாதத்துக்கு வரலாம்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் அரசுக்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பாராளுமன்ற துறைசார் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.ஆனால் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுக்கவில்லை.
ஊழலை ஒழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊழல்வாதிகளை பாதுகாக்கிறார்கள். வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மேலதிக பெரும்பான்மை வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் விசாரணைனகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து குமார ஜயகொடி வலுசக்தி அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார்.
தரமற்ற நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.ஆனால் அதனால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு யார் பொறுப்புக் கூறுவது. குமார ஜயகொடி மீது சுமத்திய குற்றச்சாட்டை தற்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி குறிப்பிடுமாறு அரசாங்கத்தின் முன்னிலை அமைச்சர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நிலக்கரி தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி விடயங்களை முன்வைப்பதற்கு தயாராகவுள்ளோம். நிலக்கரி கொள்வனவில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என்று ஆரம்பத்தில் அரசாங்கம் குறிப்பிட்டது. தற்போது தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. வெகுவிரைவில் முறைகேடு இடம்பெற்றது என்பதையும் ஏற்றுக்கொள்ளும் என்றார்.





