தமிழ் பேசும் தரப்பாக முதல் விஜயுடன் விரைவில் சந்திப்பு - மு.கா.தலைவர் ஹக்கீம் தமிழகத்தில் தெரிவிப்பு
கச்சத்தீவை இரண்டு நாடுகளும் பயன்படுத்தும் பொழுது பிரச்சினை தீர்வாகும் என்று எதிர்பாக்கலாம் அல்லவா?
இலங்கை பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக தமிழக முதல்வர் விஜயை சந்திப்பதற்கு தீர்மாத்துள்ள நிலையில் அந்த சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தமிழகத்தின் தலைமை செயலகத்திற்கு விஜயம் செய்து சட்டமன்ற நடவடிக்கைகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலில் இணைந்திருக்கிற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-ன் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நண்பர் ஆடுதுறை ஷாஜகானுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வருகை தந்தேன். இந்த நேரத்தில் சட்டப்பேரவை அமர்வில் மேகதாது அணை சம்பந்தமான விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில் அதுகுறித்த விபரங்களையும் சில உறுப்பினர்கள் உரைகளையும் கேட்டறிகிற வாய்ப்பு எனக்கு கிட்டியது.
ஒட்டுமொத்தத்தில் அமைந்திருக்கிற புதிய ஆட்சியில் பங்காளர்களாக சேர்ந்திருக்கிற எங்களுடைய நட்புறவுக் கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கின்ற அதேநேரம் இந்த தமிழக ஆட்சியின் மூலம் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவுகள் இன்னும் மேலோங்க வேண்டும், சிறப்பாக அமைய வேண்டும் என்று நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
கேள்வி: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக கைது செய்யும் நிலைமைகள் காணப்படுகின்ற நிலையில் அதுதொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவீர்களா?
பதில்: பல முறை இந்த பிரச்சினைகளை எங்களுடைய பாராளுமன்ற அமர்வுகளில் கதைத்திருக்கிறோம். உண்மையில் எப்போதெல்லாம் நாங்கள் தமிழ்நாடு வருகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செய்தியாளர்கள் எங்களிடத்திலே தொடுக்கும் முக்கிய கேள்வியாக இது மாறியிருக்கிறது என்றாலும் மக்களுடைய மனிதாபிமான பிரச்சினை மாத்திரமல்ல, வாழ்வாதார பிரச்சினை என்ற காரணத்தினால் இந்திய மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் கூட்டுறவின் அடிப்படையில் இதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இது சம்பந்தமாக தமிழக அரசும் மத்திய அரசும் இலங்கை மத்திய அரசோடும் இலங்கை மீனவர்களோடும் ஆழமான பேச்சுவார்த்தைகள் பல தடவைகள் நடைபெற்றிருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக தமிழகத் தரப்பிலே இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்கிறார்கள், சிறைப்பிடிக்கிறார்கள், சில சமயங்களில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்துகிறார்கள் என்றெல்லாம் வெளிப்படுகின்ற சந்தர்ப்பங்களிலே உணர்வுபூர்வமாக இந்தப் பிரச்சினைகள் மக்கள் மத்தியில் பிரதிபலிக்கின்றன. இது தவிர்க்க முடியாத விடயம். இருந்தாலும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வழிமுறைகளைக் கையாளுவதிலிருந்து தவிர்ந்து கொள்வதும், அதேநேரம் மாற்று வழிகளின் மூலம் மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மாற்று மீன்பிடி உத்திகளை, ஆழ்கடல் மீன்பிடிக்கான உபாயங்களை தமிழக மீனவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும், இலங்கை மீனவர்களையும் தமிழக மீனவர்களையும் கூட்டுறவாக இயங்க வைத்து, ஒரே கூட்டுறவுச்சங்கமாக செயற்படுவதன் மூலம் சில பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு பலவிதமான மாற்று உபாயங்கள் கதைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் எவையும் நடைமுறையில் இன்னமும் சாத்தியமாகவில்லை. தொடர்ந்தும் இந்தப் பிரச்சினை நீடித்துக் கொண்டு வருகிறது என்பது கவலைக்குரிய விடயம். இதைத் தீர்ப்பதற்கு இது இராஜதந்திர மட்டத்திலும் இரண்டு அரசுகளுக்கு இடையிலும் மீனவ சமூகங்களுக்கு இடையிலும் பரஸ்பரம் பேச்சுவார்த்தைகள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
கேள்வி: இரு நாட்டு மீனவர்கள் விவகாரத்தில், அதிகாரிகள், அரசுகள் சேர்ந்து குழுவொன்றை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றீர்களா?
பதில்: குழு அமைப்பது சம்பந்தமாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது, குழுக்கள் அமைக்கப்பட்டும் இருக்கின்றன. ஆனால் தீர்வுகள் எட்டப்படவில்லை என்பது தான் இருக்கிற பிரச்சினை. குறிப்பாக வெறும் நீதிமன்றத்தை நாடுவதும், சட்ட ரீதியாகவும் மாத்திரம் இந்த விடயத்தினை அணுக முடியாத ஒரு பிரச்சினை. எனவே இரண்டு தரப்பு அரசுகளும் இரண்டு தரப்பு மீனவ சமூகங்களையும் மாற்று உபாயங்களை நாடுவதற்கான பயிற்சிவிப்புகளை செய்ய வேண்டும்.
கேள்வி: அது தீர்வாக இருக்க முடியுமா?
பதில்: இல்லை, மீன்பிடிதான். மீன்பிடியிலும் ஆழ்கடல் மீன்பிடி முறைமைகளை பின்பற்றலாம். தற்போது கரையோரம் சார்ந்த மீன்பிடிகளே அதிகமாக உள்ளதன் காரணத்தினால், மீன் வளங்களைப் பாதுகாப்பது தான் பிரச்சினை. ஏனென்றால் தடை செய்யப்பட்ட உபகரணங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை வைத்துத்தான் இலங்கை மட்டத்திலே ஆட்சேபனைகள் எழுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு தமிழக மீனவர்களுக்கான மாற்று மீன்பிடி உபாயங்களை கையாளுவதற்கு அவர்களுக்கான மானிய உதவிகளைச் செய்து, அவர்களுக்கு மாற்று ஆழ்கடல் மீன்பிடிக்கான உதவிகளைச் செய்வது, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை அவர்கள் மானிய விலையில் கொள்வனவு செய்வதற்கு உதவிகளைச் செய்வது இப்படியெல்லாம் பல விடயங்கள் ஆராயப்பட்டிருக்கின்றன.
ஆனால் இன்னும் அது சாத்தியமாகவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், மீன் வளங்களைப் பாதுகாக்க வேண்டும். மீன் வளங்களை முழுமையாக அழித்துவிட்டு, எல்லோருமே தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதித்துக் கொள்ள முடியாது.
கேள்வி: தமிழக மீனவர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் கொடுத்தால் பொருத்தமானது என்ற கோரிக்கைகளும் உள்ளன. இலங்கை மீனவர்களின் நிலைப்பாடு என்னவாக உள்ளது? இலங்கை பாராளுமன்றத்தின் நிலைப்பாடு என்ன? கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசு தயாராக இருக்கிறதா?
பதில்: என்னை பொறுத்தமட்டிலே இலங்கைக்கு இந்தியாவிற்கு இடையிலான உறவை நாங்கள் தொப்புள் கொடி உறவு என்று சொல்கிறோம். பக்கத்திலே இருக்கிற நாடு சுமுகமாக 70களிலே இராஜதந்திர ரீதியாக, சர்வதேச சட்டங்களின் அடிப்படையில், அதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட இந்திய மத்திய அரசின் தீர்மானத்திற்கு அமைவாக இலங்கைக்கு கச்சத்தீவின் உரிமை, குறிப்பாக அதனுடைய இறையாண்மை இருக்கிறது என்பது தீர்மானிக்கப்பட்ட விடயம். அதை மீள் பரிசீலனை செய்வதாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபைக்குத்தான் போக வேண்டும். அதை இலங்கை இந்தியோ மாத்திரம் தீர்மானிக்க முடியாது.
இது சர்வதேச சட்டத்தின் சார்ந்த பிரச்சினை. அதை மீறி செய்வதாக இருந்தால் ஒரு படையெடுப்பு நடத்தித்தான் கைப்பற்ற வேண்டும். அதை ஒருநாளும் இந்திய மத்திய அரசு இலங்கைக்கு எதிராக செய்ய மாட்டாது என்று நாங்கள் நினைக்கிறோம்.
மீனவர் பிரச்சினை வந்தவுடனே கச்சத்தீவு பிரச்சினையை முன்னிலைப்படுத்துவது என்பது என்னைப் பொறுத்தமட்டிலே ஒரு விவேகமான அணுகுமுறை அல்ல. அதைத் தவிர்த்து இந்தப் பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசோடு சுமுகமாக இராஜதந்திர ரீதியாக கதைத்து தீர்த்துக் கொள்ள முடியும் என்பதில் நான் ஆழ்ந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்.
கேள்வி: இரண்டு நாடுகளும் பயன்படுத்தலாம். அரசுகள் பேச வேண்டும் என்று சொல்கிறீர்கள். கச்சத்தீவை இரண்டு நாடுகளும் பயன்படுத்தும் பொழுது பிரச்சினை தீர்வாகும் என்று எதிர்பாக்கலாம் அல்லவா?
பதில்: இல்ல, கச்சத்தீவுக்கு இந்தியர்கள் வருவதில் எந்த தடையும் கிடையாது. இன்று கச்சத்தீவிலே அந்தோனியார் தேவாலயம் இருக்கிறது. இல்ல, அதுக்கு தாராளமாக வந்து போவதற்கு இலங்கை கடற்படையினர், இலங்கை மீனவர்கள் அவர்களை உபசரிக்கின்றார்கள். அவர்களை வந்து போக அனுமதிக்கின்றார்கள். ஆனால் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிற போதுதான் பிரச்சினை பூதாகரமாக மாறுகிறது. இதை கொஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு பரஸ்பரம் பேசி இராஜதந்திர ரீதியாகத்தான் முடிவெடுக்க வேண்டும்.
கேள்வி: அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் சந்திப்பில் வேற என்ன பேசினீர்கள்? முதல்வரை சந்திக்க இருக்கீங்களா?
பதில்: அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் அவர்களை சந்தித்து சிறுபான்மையினரின் துறையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினேன். முதல்வர் ஜோசப் விஜய்யை மிக விரைவிலே நாங்கள் சந்திப்போம். எங்களைப் பொறுத்தமட்டில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றாக, கூட்டாக முதல்வரை சந்திப்பதற்காக நாங்கள் நாள் ஒதுக்கி வருவதாக தீர்மானித்திருக்கிறோம். எனவே தான் நான் தனிப்பட்ட முறையிலே அந்த சந்திப்பினை நடத்தவில்லை.இப்படியான பிரச்சினைகளை தனித்தனியாக வந்து பேசி தீர்க்க முடியாது நாங்கள் எல்லோருமாக சேர்ந்து, கூட்டாக சந்திப்பதன் ஊடாக அதனை தீர்க்கலாம்.
எனவே இலங்கை பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை சந்திப்பதென என்று முடிவெடுத்திருக்கிறோம். அதன்படி மிக விரைவிலேயே அந்த சந்திப்பு நடக்கும் என்றார்.





