அமெரிக்க தபால் சேவைக்கு செலுத்தப்பட்ட 6 இலட்சம் டொலர் மாயம்
நிறுவன மட்டத்தில் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் போது அந்தந்த நிறுவனங்களே முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இலங்கை தபால் திணைக்களத்தினால் அமெரிக்க தபால் சேவைக்கு வழங்கப்பட்ட 6 இலட்சம் அமெரிக்க டொலர் கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் நிறுவன மட்டத்திலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 28-04-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்க தபால் சேவைக்கு செலுத்த வேண்டிய குறித்த நிதியானது, உரிய தரப்பினருக்குக் கிடைக்கவில்லை என உத்தியோகபூர்வ முறைப்பாடு கிடைத்துள்ளது. திறைசேரி நிதிப் பரிமாற்றத்தின் போது இடம்பெற்றது திட்டமிட்ட மோசடியா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து பரந்துபட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நிறுவன மட்டத்தில் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் போது அந்தந்த நிறுவனங்களே முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தபால் திணைக்கள விவகாரம் மாத்திரமன்றி, திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலும் நிதி அமைச்சு ஏற்கனவே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளது. உள்ளக விசாரணைகள் நிறைவடையும் முன்னரே, விடயத்தின் பாரதூரத்தன்மை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி கட்டமைப்பில் ஏதேனும் அடிப்படை தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் யாரேனும் அதிகாரிகள் திட்டமிட்டுச் சதி செய்திருப்பது உறுதியானால் அவர்களுக்கு எதிராகத் தராதரம் பார்க்காமல் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, இழக்கப்பட்ட நிதியை மீண்டும் நாட்டுக்குப் பெற்றுக்கொள்வதற்காகச் சர்வதேச உதவிகளுடன் சட்ட ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிறுவன ரீதியான பிரச்சினைகள் அனைத்தையும் அமைச்சரவையில் கலந்துரையாடுவதில்லை. அந்தந்த நிறுவனங்கள் ஊடாகவே தீர்வுகள் எட்டப்படுகின்றன என்றார்.





