காணாமலாக்கப்பட்டவர்களுக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட கோரிக்கை
தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்குப் பதிலின்றி வாழும் குடும்பங்கள் முகங்கொடுத்துவரும் பெருந்துயரத்தை எம்மால் உணரமுடிகிறது.

உண்மையை அறிந்துகொள்வதற்கும், நீதியை நாடுவதற்குமான உரிமை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அவர்களது உரிமையை உறுதிப்படுத்துவதற்குரிய செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அரச அதிகாரிகளால் அல்லது அவர்களால் கட்டளையிடப்படுவோரால் இரகசியமாகக் கடத்தப்பட்டு, பின்னர் அவர்கள் எங்கே என்பது பற்றிய உண்மையை வெளிப்படுத்துவதற்கு மறுப்பதன் ஊடாக நிகழும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் பற்றியும், அதனால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் விழிப்புணர்வூட்டும் நோக்கில் இத்தினம் 2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
இது வலிந்து காணாமலாக்குவதை நிறுத்துமாறும், அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், குற்றவாளிகளைத் தண்டிக்குமாறும், உண்மையை வெளிப்படுத்துமாறும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான இழப்பீட்டை வழங்குமாறும், வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து சகல தரப்பினரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்தை உரியவாறு பின்பற்றுமாறும் அரசுகளை வலியுறுத்துவதற்கான தினமாகும்.
தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்குப் பதிலின்றி வாழும் குடும்பங்கள் முகங்கொடுத்துவரும் பெருந்துயரத்தை எம்மால் உணரமுடிகிறது. வலிந்து காணாமலாக்கப்படல் என்பது மிகமோசமான மனித உரிமை மீறல் என்பதுடன் அதனூடாக உரிமைகளின் அடிப்படையான கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி என்பன தகர்க்கப்படுகின்றன.
இலங்கையைப் பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல் என்பது தீவிர கரிசனைக்குரிய மனித உரிமைசார் பிரச்சினையாகக் காணப்படுவதாக நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியிருக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பில் செயற்திறன்மிக்க விசாரணைகளை முன்னெடுத்தல், உண்மைகளைக் கண்டறிதல், இழப்பீடுகளை வழங்கல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் என்பன அரசின் பொறுப்பு எனவும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருக்கிறோம். உண்மையை அறிந்துகொள்வதற்கும், நீதியை நாடுவதற்குமான உரிமை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இருக்கிறது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.