சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்: பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய
தற்போது எமது பொலிஸ் திணைக்களமும் அதற்கான நம்பிக்கை கட்டியெழுப்பி வருகிறது. பொலிஸ் திணைக்களம் சர்வதேசத்துடன் சிறந்த பிணைப்பை உருவாக்கி வருகிறது.
நாட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒடுக்க வேண்டுமானால் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு அவசியமாகும். எனவே நாம் சர்வதேசத்துடன் சிறந்த உறவை மேம்படுத்தி வருகிறோம். அதேபோன்று தற்போது பொலிஸ் திணைக்களத்துக்கு அரசியல் இடையூறு மற்றும் அழுத்தங்களின்றி செயற்பட முடிந்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று 28-08-2025அன்று அரசாங்கதகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே பொலிஸ் மாஅதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர். எம்மால் தற்போது தடையின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த முடிகின்றது.காரணம் அரசியல் தலையீடும் அழுத்தமும் இன்றி பொலிஸாருக்கு செயற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய மேலதிக சட்ட நடவடிக்கை தொடர்பில் எமக்கு ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே அவர்களுக்கு எதிராக எம்மால் செயற்பட முடியும். அதற்கான நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம்.
நாட்டில் திட்டமிட்டக்குற்றச்செயல்களை ஒடுக்க வேண்டுமானால் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே நாம் சர்வதேச தூதரகங்கள் மற்றும் அதன் தூதுவர்களுடன் சிறந்த உறவை மேம்படுத்தி வருகிறோம்.
தற்போது எமது பொலிஸ் திணைக்களமும் அதற்கான நம்பிக்கை கட்டியெழுப்பி வருகிறது. பொலிஸ் திணைக்களம் சர்வதேசத்துடன் சிறந்த பிணைப்பை உருவாக்கி வருகிறது. ஆனால் பொலிஸ் திணைக்களம் தொடர்பில் பொதுமக்களுக்கு நூறு வீதம் நன்மை ஏற்பட:டுள்ளதா என்பது தொடர்பில் எனக்கு தெரியாது. எனினும் அந்த நம்பிக்கையை நாம் கட்டம் கட்டமாக ஏற்படுத்தி வருகிறோம்.
எமது அதிகாரிகள் தவறிழைத்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டட நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்கு தண்டனையை குறைக்க நாம் செயற்பட மாட்டோம். நாம் நியாயமாக செயற்படுகிறோம். எமது அண்மைகால செயற்பாடுகளை அவதானிக்கும் போது அதனை மக்களால் அறிந்துகொள்ள முடியும். தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ள சுதந்திரம் மற்றும் சர்வதேசத்திடம் எமக்கு கிடைத்துள்ள நம்பிக்கையினாலும் எம்மால் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்துள்ளது என்றார்.





