ஐக்கிய மக்கள் சக்தி மே தினப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை - ஐ.தே.க.
இந்த ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி பௌர்ணமி போயா தினமாக அமைந்துள்ளதால், அன்றைய தினம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அதனை மத நிகழ்வுகளுக்காக ஒதுக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி பங்கேற்காது என்று அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி பௌர்ணமி போயா தினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ஏப்ரல் 27 ஆம் திகதியிட்ட உங்களது கடிதம் கிடைக்கப்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது, அந்த மக்கள் விருப்பத்துக்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். எனினும், இந்த ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி பௌர்ணமி போயா தினமாக அமைந்துள்ளதால், அன்றைய தினம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அதனை மத நிகழ்வுகளுக்காக ஒதுக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பிரதமராக இருந்த காலத்திலேயே, மே 1 ஆம் திகதி பௌர்ணமி தினமாக அமையும் பட்சத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமற்றது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியின் அல்லது வேறு எந்தக் கட்சியும் ஏற்பாடு செய்யும் மே தினப் பேரணிகளில் எம்மால் பங்கேற்க முடியாதுள்ளது. எவ்வாறாயினும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதை மீண்டும் நினைவுறுத்துவதுடன், உங்களது அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிகரமாக அமையப் பிரார்த்திக்கிறேன்.





