தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு இடையில் பொது இணக்கப்பாடு
எதிர்வருங்காலங்களில் தமிழர்கள் சார்ந்த சில முக்கிய விடயங்களில் ஐக்கியமாக செயற்படுவது குறித்து பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் கேசரியிடம் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகித்தல் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுத்தீர்வை முன்வைப்பதை இலக்காகக்கொண்டு இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல் என்பன தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் பொது இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளன.
வட, கிழக்கு தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பொதுவான பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பொன்றை நடத்துவதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி நவம்பர் மாதம் 7 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு அழைப்புவிடுத்திருந்தது.
அக்கடிதத்துக்கு கடந்த 20 ஆம் திகதி பதில் அனுப்பிய ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் இரட்ணலிங்கம், தமிழரசுக்கட்சியுடனான சந்திப்பில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், டிசம்பர் மாதம் 7 ஆம் அல்லது 14 ஆம் திகதி சந்திப்பதற்குத் தாம் உடன்படுவதாகவும் தெரியப்படுத்தியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சி எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி சந்திப்பை நடத்தமுடியும் என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு அறிவித்திருந்தது.
அதற்கமைய யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் தமிழரசுக்கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு 07-12-2025 அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் அதில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்களான சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வேந்தன், சந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது தமிழ் மக்களின் அதிகாரங்கள், இனப்பிரச்சினை, தமிழர்கள் பொதுவாக முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகவும், எதிர்வருங்காலங்களில் தமிழர்கள் சார்ந்த சில முக்கிய விடயங்களில் ஐக்கியமாக செயற்படுவது குறித்து பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் கேசரியிடம் தெரிவித்தார்.
அதன்படி முதலாவதாக எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மாகாணசபைத்தேர்தல்கள் நடத்தப்பட்டு, அதனூடாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவேண்டும் எனவும், அதனை முன்னிறுத்தி அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கு இருதரப்பினரும் இணங்கியதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
அதேபோன்று தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு குறித்து ஆராய்ந்து, பொதுவானதொரு தீர்வை முன்வைப்பதை இலக்காகக்கொண்டு எதிர்வருங்காலங்களில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இச்சந்திப்பில் வட, கிழக்கு மாகாணங்களில் பௌத்தமயமாக்கம், இராணுவமயமாக்கம் உள்ளிட்ட தமிழர்களின் பொதுப்பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.





