பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள வீதியை காணொளியாக பதிவு செய்த நபர் கைது
பொழுதுபோக்குக்காகவே இதனை காணொளியாக பதிவு செய்ததாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்
கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் அமைந்துள்ள வீதிகளைத் தனது கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த நபர் ஒருவரைக் கருவாத்தோட்டம் பொலிஸார் 07-08-2026 அன்று கைது செய்துள்ளனர்.
சொகுசு காரொன்றில் வந்த நபர் ஒருவர், வாகனத்தை நிறுத்திவிட்டு பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அருகிலுள்ள வீதியில் நின்றவாறு வீடியோ பதிவு செய்வதைப் பிரதான நுழைவாயிலில் கடமையிலிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் அவதானித்துள்ளார். உடனடியாகச் செயற்பட்ட அவ்வதிகாரி, அருகில் போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவர் கொழும்பு அவசர அழைப்புப் பிரிவுக்கு அறிவித்துள்ளார். அதனடிப்படையில் கருவாதோட்டம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
கைதான நபரின் கைத்தொலைபேசியைப் பரிசோதித்தபோது, பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளை காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. பொழுதுபோக்குக்காகவே இதனை காணொளியாக பதிவு செய்ததாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். எனினும், அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின்போது, தனது வதிவிடம் குறித்து முரண்பாடான தகவல்களை வழங்கியதாகச் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அலுபோமுல்ல, அருக்கொடை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கருவாதோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





