சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை: அமைச்சர் ஆனந்த விஜேபால
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய தகவல்களின் பிரகாரம் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை என இடம்பெறும் விசாரணைகளில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதேநேரம் அவர் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 07-01-2026 அன்று வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய இடையீட்டு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
முஜிபுர் ரஹ்மான் தனது கேள்வியின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் நேரடி தொடர்பான சாரா ஜெஸ்மின் தொடர்பில் 2020க்கு பின்னர் கோட்டாப ராஜபக்ஷ் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசாரணைக்குழுவின் 3ஆவது விசாரணையிலேயே சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாக தெரிவிப்பதற்கு முயற்சித்தார்கள். என்றாலும் சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாக நாங்கள் யாரும் நம்புவதில்லை. அவர் தப்பிச்சென்றுள்ளார் அல்லது தப்பிச்செல்ல சிலர் அவருக்கு உதவி செய்திருக்கிறார்கள்.
சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்து வந்தார். அதேநேரம் பாதுகாப்பு பிரதி அமைச்சரான அருன ஜயசேகர, குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வந்தார். அத்துடன் சாரா ஜெஸ்மின் தப்பிச்சென்றதும் இந்த காலப்பகுதியிலாகும்.
அரசாங்கம் பாதாள குழுக்களை கைதுசெய்ய திறந்த பிடியாணைகளை பெற்று செயற்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடமாகியும் சாரா ஜெஸ்மினை கைது செய்ய ஏன் பிடியாணை பிறப்பிக்காமல் இருக்கிறது. அத்துடன் இந்த அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர், நாட்டுக்கு வந்து சென்றார். ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இவ்வாறான கலந்துரையாடல்களின்போது, சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருந்தால், அவரை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் கலந்துரையாடி இருந்தீர்களா? அதேநேரம் சாரா ஜெஸ்மினை கண்டுபிடிக்க ஏன் திறந்த பிடியாணையை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறது என கேட்கிறேன் என்றார்.
அதற்கு அமைச்ர் தொடர்ந்து பதிலளிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இடம்பெற்றுவரும் விசாரணைகளில் இருந்து ஒருசில தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. குறிப்பாக குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை எனவும் விசாணைகளில் இருந்து தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன..
அதேபோன்று சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. என்றாலும் அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய தகவல்களின் பிரகாரம் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஏதாவது சதி திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றதா என்ற விசாரணையே புதிய அரசாங்கத்தின் கீழ் இடம்பெறுகிறது. அதனால் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவை ஏற்படும் பட்சத்தில் சாரா ஜெஸ்மினை கைதுசெய்ய பிடியாணை பெற்றுக்கொள்வோம் என்றார்.





