தந்தையும் மகனும் இணையும் காலம் மலர்ந்துள்ளது: மனோ கணேசன்
ஐக்கிய தேசிய கட்சி தாய்வீடென்றால் அதன் தந்தை ரணில், அவரது மூத்த புத்திரன் சஜித் ஆவார். இந்த குடும்பத்தின் தகராருகளில் நாம் தலையிடுவதில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டிய சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது. அதற்காக பணிகளை நான் பின்னணியிலிருந்து முன்னெடுப்போம். இது கள்வர்களின் கூடாரம் அல்ல. இந்த ஒற்றுமை அரசியல் ரீதியானதாகவும், ஒருமித்த இலங்கைக்குள் சிறப்பான எதிர்காலத்துக்கானதாகவும் அமைய வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பில் 20-09-2025 அன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இது ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது சம்மேளனம் மாத்திரமல்ல. மாறாக அனைவரும் ஒன்றிணைவதற்காக தளமாகும். நாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் உத்தியோகபூர்வமாக அங்கத்துவம் வகிக்கின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சி தாய்வீடென்றால் அதன் தந்தை ரணில், அவரது மூத்த புத்திரன் சஜித் ஆவார். இந்த குடும்பத்தின் தகராருகளில் நாம் தலையிடுவதில்லை. காரணம் நாம் அயல் வீட்டார். தாய் வீட்டிலிருந்தவர்களே ரணிலை கைவிட்டுச் சென்ற போது நாம் அவருடன் நின்றிருக்கின்றோம். எந்த சந்தர்ப்பத்திலும் நான் கொள்கைகளைக் காட்டிக் கொடுக்கவில்லை. காட்டிக் கொடுக்கப் போவதுமில்லை.
இப்போதும் நான் உங்கள் புதல்வரின் கூட்டணியிலேயே இருக்கின்றேன். தற்போது தந்தையும் புதல்வனும் இணைவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. நாம் பின்னணியிலிருந்து அதற்கான பணிகளை முன்னெடுப்போம். 77 ஆண்டு சாபம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அது உண்மையெனில் அதில் 51 சதவீத பங்களிப்பு தற்போது ஆட்சியமைத்திருக்கும் ஜே.வி.பி.யினரதாகும். நாம் முட்டாள்கள் அல்ல. அவர்களைப் பற்றி நாம் நன்கு அறிவோம்.
வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் நாம் தவறிழைத்திருக்கின்றோம். இது பல்லின மக்கள் வாழும் நாடு என்பதற்கு அப்பால் பிரிவினைவாதங்களுடன் செயற்பட முற்பட்ட போதே எமது தவறுகள் ஆரம்பித்தன. இதனால் ஜனநாயக கட்சிகள் பிளவடைந்தன. இவற்றை விடுத்து நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை, நாம் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பினை உருவாக்கியிருக்கிறது. இதனை கள்வர்களின் கூடாரம் என அரசாங்கம் கூறுகிறது. அதை நாம் முற்றாக நிராரிக்கின்றோம்.
கள்வர்களா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். அரசாங்கம் சட்டத்தை கைகளில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் ஊழல், மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்படவில்லை. நபரொருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலப்பகுதியில் எந்தெந்த சந்தர்ப்பத்தில் அவர் ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகள் நீங்குகின்றன என்பதையும், தனிப்பட்ட விடயங்கள் எங்கு ஆரம்பிக்கின்றன என்பதையும் வரையறுத்து தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரவை வலியுறுத்துகின்றேன். பாராளுமன்றத்தில் சட்டமொன்றை நிறைவேற்றுங்கள்.
அதேபோன்று வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவை தொடர்பில் கண்காணிப்பதற்கான பொறிமுறையொன்றையும் உருவாக்குங்கள். எதிர்க்கட்சி தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம். இது பௌதீக ஒற்றுமையாக மாத்திரமின்றி அரசியல் ரீதியான ஒற்றுமையாகவும் நாட்டை மேம்படுத்துவதற்கானதாகவும் அமைய வேண்டும். பிளவற்ற இலங்கைக்குள் ஒற்றுமையான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும் என்றார்.





