மொங்லா துறைமுகத்தை நவீனமயமாக்க சீனாவிடம் ரூ. 3,593 கோடி கடன் வாங்குகிறது வங்கதேசம்
சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கும் வங்கதேச அரசுக்கும் இடையே சனிக்கிழமை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய கடல் துறைமுகமான மொங்லா துறைமுகத்தை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவதற்காக, சீனாவுடன் சுமார் 335.78 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சலுகைக் கடன் ஒப்பந்தத்தில் வங்கதேசம் கையெழுத்திட்டுள்ளது. சிட்டகாங் துறைமுகத்திற்கு அடுத்தபடியாக அமைந்துள்ள மொங்லா துறைமுகத்தின் சரக்குக் கையாளும் திறனை அதிகரித்து, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று திங்கள்கிழமை வெளியான ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ், இரண்டு சரக்குப் பெட்டக முனையங்களும் சரக்குகளைக் கையாள்வதற்கெனத் தனிப்பட்ட தளங்களும் அமைக்கப்பட உள்ளன.
சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கும் வங்கதேச அரசுக்கும் இடையே சனிக்கிழமை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மதிப்பு 2.404 பில்லியன் சீன யுவான் அல்லது 3,592.8975 கோடி வங்கதேச டாக்கா என அரசுக்கு சொந்தமான பிஎஸ்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கதேச நிதியமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தக் கடனுக்கு ஆண்டுக்கு 2 சதவீதச் சலுகை வட்டி விதிக்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மொத்தக் காலம் 20 ஆண்டுகள் ஆகும். இதில் முதல் ஐந்து ஆண்டுகள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத சலுகைக் காலமாகும்.





