நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம்
அப்போதைய பணிப்பாளராக இருந்த ஜானகி சிறிவர்தன மூலம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபா இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தனவினால், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்திருந்த விசாரணைகளின் போது, கோட்டை டிரான்ஸ்வேர்க் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியை கூட்டு அபிவிருத்தித் திட்டத்துக்காக 'கிரிஷ் டிரான்ஸ்வேர்க் தனியார் நிறுவனத்துக்கு' வழங்குவதற்கான பணிகளை விரைவாக நிறைவு செய்து தருவதற்காக, அந்நிறுவனத்தின் அப்போதைய பணிப்பாளராக இருந்த ஜானகி சிறிவர்தன மூலம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபா இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இச்சம்பவம் குறித்து, மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.
அதற்கமைய நீதிமன்ற உத்தரவின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 70 மில்லியன் ரூபா இலஞ்சப் பணம் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நிமல் பெரேரா என்பவரின் வங்கி கணக்கு மூலமாகவே வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது வெளிப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





